முற்றத்து மல்லிகை

மல்லிகை உதிர்ந்து போச்செம்
மண்ணதன் வாசம் தந்த
மல்லிகை மறைந்து போச்சு!
வரலாற்றில் என்றும் வாடா
மல்லிகை மலர வைத்த
மனம் இன்று உறைந்து போச்சு!
மல்…எழுத்தாலே செய்த
மனிதமும் தொலைந்தா போச்சு?
தளராத தேகம், தோளில்
தனிப்பையில் மல்லிகைகள்
களைப்பற்ற பவனி, கோடி
கனவுகள் சுமந்த கண்கள்,
எழுதியே சளைக்காக் கைகள்,
எளிமை, தீட்சண்யப் பார்வை,.
பழுதாகா எண்ணம், இந்தப்
‘பாட்டாளி’ வாழ்வின் சாரம்.
மண்ணதின், மனதின், ஏற்றத்
தாழ்வினை மறுத் தெழுத்தில்
பண்ணுவோம் வழிகள் என்று
பயணித்து, இறுதி மட்டும்
உண்மையாய் உழைத்து, ஆவி
உடல் பொருள் மல்லிகைக்கே
என்றிட்ட ஜீவா..போனார்
இனி அந்த வாசம் எங்கே?