காலவெளி

காலவெளி இதழுக்கான நேர் காணல்
த.ஜெயசீலன்

29.12.2012

1.உங்களைப் பற்றி?


DSC08589யாழ்ப்பாணத்தின் நல்லூரில் 1973 மார்ச் 5 ஆந் திகதி பிறந்து வளர்ந்தேன். தந்தை தனபாலசிங்கம். தாய் மேனகா. எனக்கு ஒரு சகோதரி. ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும், பின் யாழ் இந்து கல்லூரியிலும் கற்று, உயர்தரத்தில் உயிரியல் பாடத்தில் பயின்று, யாழ் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 2000 ஆம் ஆண்டில் பெற்றேன். 2007 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘குடிசன அபிவிருத்தி’யில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றேன். ஆரம்பத்தில் உடுவில் மகளீர் கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில்; உயிரியல் ஆசிரியராக பணியாற்றினேன். 2001 இல் நடந்த இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியெய்து நிர்வாக சேவையில் 2004 இல் வடமராட்சி கிழக்கு, பின் 2006இல் காரைநகர்; பகுதிகளில் உதவி அரச அதிபராகவும், பின் 2012 இல் பருத்தித்துறை பிரதேச செயலாளராகவும் பணியாற்றுகின்றேன். மனைவி லங்கினி விஞ்ஞானப் பட்டதாரி. யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியர்;. புத்திரிகள் இருவர் ஆருத்திரா, அட்சரா.

2.உங்களின் கலைப்பிரவேசம் குறித்த அடிப்படைக் காரணிகள் உள்ளிட்ட தகவல்களையும் கவிதைத் துறையில் நுழைவதற்கு ஏதுவாயமைந்த நேரடிக் காரணிகளையும் கூற முடியுமா?


இயல்பாக கவிதைத்துறையில் ஏற்பட்ட திடீர் ஆர்வத்தால் 1992 இல் யாழ் இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற நிகழ்வுக்காக கவிதை எழுதினேன். பின் யாழ் இந்துக்கல்லூரி தமிழாசான் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரத்தின் ஊக்குவிப்பில் கவியரங்குகளில் பங்குகொண்டேன். அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்தால் நல்லூர் கம்பன் விழாவில் 1993 இல் பங்கு கொண்டேன். பின் ஈழத்து முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான இ.முருகையன் அவர்களின் நீர்வேலியிலிருந்த வீடு தேடிச் சென்று ஓரிரு ஆண்டுகள் அவரின் அணுக்கத் தொண்டனாகி கவிதை யாப்பின் நுட்பங்களைக் கற்றேன். சாளரம் சஞ்சிகை என் கவிதை ஒன்றை முதலில் பிரசுரித்தது. சிரித்திரன் சஞ்சிகை என் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு வழங்கியிருந்தது. 1995 இல் வலிகாமம் இடப்பெயர்வினைத் தொடர்ந்த மீள்குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் என் கவிதைகள் வெளிவந்தன. இலங்கை வானொலியின் இதயசங்கமம், கவிதைக்கலசம் என்ற நிகழ்ச்சிகளில் என் கவிதைகள் வாசிக்கப்பட்டன. பல கவியரங்குகளில் பங்கு கொள்ள வாய்புக்கள் கிடைத்தது.

3.உங்களைக் கவர்ந்த அல்லது உங்கள் படைப்புகளில் தெரிந்தோ தெரியாமலோ தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உங்கள் சிந்தனையை ஈர்த்த கவிஞர்கள் யார்? அவர்களில் உங்களுக்குப் பிடித்த விடயங்கள் பற்றியும் அவர்களின் கவிதைகள் குறித்தும்?


திருவள்ளுவரின் திருக்குறள், கம்பனின் கவிதைகள், மாணிக்கவாசகர் திருவாசகம், அருணகிரிநாதர் திருப்புகழ், சித்தர் பாடல்கள், தொடர்ந்து பாரதியின் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகளும் ஈழத்து மஹாகவி, முருகையன், புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், சோ.பத்மநாதன், கல்வயல் குமாரசாமி, த.முகுந்தன், என்பவர்களின் கவிதைகளும் என்னை கவர்ந்தவை. இத்துடன் நவீன கவிதை பாடிய கவிஞர்களான பசுவைய்யா, சுகுமாரன், மனுஷ்ய புத்ரன், சல்மா, மாலதி மைத்ரி போன்றவர்களின் கவிதைகளும் ஈழத்தில் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சோலைக்கிளி, கருணாகரன், அனார், ப.அகிலன், திருக்குமரன் என்போரின் கவிதைகளும் எனக்கு உவப்பானவை. ஈழத்தில் மஹாகவி, புதுவை ஆகியோரின் கவிதைகளில் பல எனக்கு மனப்பாடமானவை. அவற்றின் சந்தம், பேச்சோசை, கிராமியச் சொல்லாட்சி, ஆற்றோட்ட நடை என்பன என்னை மிகவும் கவர்ந்தவை.

4.நீங்கள் சொந்தப் பெயர் தவிர்ந்த வேறு புனைபெயர்களில் எழுதி வருகிறீர்களா?
ஆரம்பத்தில் சில காலம் சொந்தப் பெயருடனும் த.அன்பழகன், அருணன், தேரடித்சித்தன் என்ற புனை பெயர்களிலும் எழுதியிருந்தேன். தற்போது பயன்படுத்துவது எனது சொந்த பெயரை மட்டும் தான்.

5.கனவுகளின் எல்லை, கைகளுக்குள் சிக்காத காற்று போன்ற உங்கள் தொகுப்புகள் ஊடாக உங்களுக்கு கிடைத்த திருப்தி, வெற்றி, விமர்சனங்கள் பற்றி?
‘கனவுகளின் எல்லை’ 2001 இல் வெளிவந்தது. மாகாண மட்ட விருதை பெற்றது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ 2004 இல் வெளிவந்து இலக்கிய பேரவை பரிசைப் பெற்றது. இத்தொகுப்பு 2004 இல் வெளிவந்ததில் ‘சிறந்த கவிதைத் தொகுதி’ என 26.12.2004ஆம் திகதி வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004’ பகுதியில் தமிழக எழுத்தாளர் அமரர் சுஜாதா தெரிவு செய்து இருந்தார். இவை இரண்டு தொகுதிகளும் எனது முழுமையான தொகுதிகள் எனக் கருதவோ, திருப்திப்படவோ முடியாது. இத் தொகுதிகள் பற்றி என்னிடமும் விமர்சனங்கள் உண்டு.

3ம் தொகுதி இன்னும் வெளிவரவில்லை. கால இடைவெளிக்கு எனது கடமை காரணமாகிவிட்டது. ஆனாலும் மனத்திருப்தியுடன் தேக்கமற்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்.

6.கவிதைத் துறையில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக எதனைக் கருதுகிறீர்கள்?


கவிதை எனது தொழிலல்ல அது என்உயிர்! கடமை, பதவி நிமித்தம் நான் வேறு வேறு வேடம் புனைந்திருந்தாலும் ஒரு கவிஞனாக இருப்பதே எனக்கு எப்போதும் மிக்க மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும் தருவதாக உள்ளது. யாரும் போற்ற வேண்டும் பாராட்ட வேண்டும் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக நான் கவிதை எழுதுவதில்லை. கவிதை என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னை தொடர்ச்சியாக எழுதி வருகிறது. கவிதை என்னை மிருக நிலையிலிருந்து ஓரளவு மனித நிலைக்கு கொண்டுசெல்ல உதவியிருக்கிறது.

 
என்னை என் கவிதை மாற்றியது, மாற்றுகிறது, இனியும் மாற்றும் என்பது என் நம்பிக்கை. இன்னும் நான் மாற வேண்டிய அளவு, செல்ல வேண்டிய தூரம் அதிகமாகவே இருக்கிறது. எனது வாழ்க்கை ஆழியை நீந்தி கடக்க எனக்கு இயற்கையால், இறையருளினால் கிடைத்த கருவியாக, என் உயிர்ப் பயணம் தொடர எனக்கு இடப்படும் எரிபொருளாக என் கவிதை விளங்குகிறது என்பது என்முடிவு. எழுதி வெளிவராத அனேகம் கவிதைகள் என்னிடம் உள்ளன. அவை என்றோ ஒருநாள் தம்மை வெளிப்படுத்தும் என்பது திண்ணம். என் கவிதைக்கு நான் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது என் இலட்சியம், அந்த மனப்பாங்கு தான் கவிதைத்துறையில் ஈடுபடுவதால் நான் பெற்ற பெரும்பேறு.

7.கவிதைகளில் ஓசைநுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் சக கவிஞர்களுக்கு ஏதும் கூற விரும்புகிறீர்களா?


இதனை மீண்டும் மீண்டும் நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. உண்மைகளுக்கு விளக்கம் தேவையில்லை. நான் யாருக்காகவோ அல்லது யாரையும் திருப்திப்படுத்தவோ அல்லது நவீன கவிதையாளர்களுடன் மோதிப் பிரபலம் தேடிக்கொள்வதற்கோ ஓசை நுணுக்கங்களைத் தூக்கிப் பிடிக்கவில்லை.

 

எனக்கு ஓசை நுட்பங்கள் இயல்பாக வருகிறது. அது என்னை மிகவும் கவர்கிறது. அது என் இயல்பு, என் தனித்துவம், நான் என் பாதையில் போகிறேன். ஏற்பவர்கள் ஏற்கட்டும். தவிர்ப்பவர்கள் தவிர்க்கட்டும். நான் எவருஞ் செல்லும் பாதை பற்றி விமர்சனஞ் செய்வதில்லை. நான் யார் எழுதுவதிலும் சரிபிழை சொல்ல விரும்புவதில்லை. அவரவர் திறமையை சுதந்திரத்தை மதிக்கிறேன். அதே நேரம் என் கவிதைகளை ‘கவிதைகளே இல்லை’ என்று கூறுவோரையும், ‘இப்படித்தான் நீ எழுதவேண்டும்’ என எனக்கு கட்டளையிடுபவர்களையும், என் இயல்பை மறுதலிப்பவர்களையும் பற்றி நான் கவலைப்படவும் மாட்டேன்.புதுப்புது விமர்சகர்கள் ஆயிரம் வியாக்கியானஞ் சொன்னாலும் கவிதையின் உருவம், வடிவம், உள்ளடக்கம் என்பன பற்றி என்னிடம் தெளிவான அளவுகோல்கள் உண்டு.

 
உலகிலுள்ள எந்த மொழியின் எந்தச் சொல்லும் எந்த வார்த்தைகளும் இரு வகையான அசைகளான ‘நேர்’, ‘நிரை’ என்னும் அசைகளில் அடக்கப்படக் கூடியவை என்பது மிக வியப்பானது. இது இசையின் அடிப்படையான ஏழு சுரங்கள் போன்றது. இவ் ‘அசை’களில் இருந்து தமிழ்க் கவிதையின் யாப்பு அல்லது தமிழ்க் கவிதை இலக்கண மரபு வேர்கொள்கிறது. இது அசை, சீர், அடி மற்றும் தளை என்பனவாக வளர்த்தெடுக்கப்படும் போது மொழியின் ஓசைப்பண்பு ஒரு ஒழுங்குடன் ஒழுக்கத்துக்குள் உட்பட்டு செம்மைப் படுத்தப்பட்ட, இசையிலிருந்து வேறுபட்ட ஓசைப் பண்பைத் தருகிறது.
எனவே மொழியின் இயல்பாக உள்ளடங்கியுள்ள ஓசைச்சிறப்பு என்பது கவிதையின் தனித்துவத்தைப் பேணுகின்ற, கவிதையில் செல்வாக்குச் செலுத்துகிற, கவிதையின் ஆன்மா போன்ற, முக்கியமான காரணியாகிறது. இவ் ஓசைப் பண்பு வழக்கொழிந்து விட்டது. இது கவிதையில் வலிந்து தவிர்க்கப் பட்டே ஆகவேண்டும் என்போர் பற்றி நான் அலட்டிக்கொள்ள மாட்டேன். எமது கவிதை மரபுப் பரீச்சயம் எமது இளைய கவிஞர்களுக்கு அவசியம் என்பதுடன் இதுவே நவீன, புதுக்கவிதைகளை எதிர்காலத்தில் சரியான திசைவழியே இட்டுச் செல்ல உதவும் என்றும் நம்புகிறேன்.

8.ஈழத்தில் இனங்காணப்பட்ட கவிஞர்களில் ஒருவராக விளங்கும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதயன் சஞ்சீவி எந்தளவுக்கு பங்களிப்பு வழங்கியதாக கருதுகிறீர்கள்?


1992இல் இருந்து பத்திரிகை சஞ்சிகை வானொலி என்பவற்றில் என் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன. 1996 இல் வலிகாம இடப்பெயர்வினைத் தொடர்ந்து மீள்குடியேறிய பின் ஓரிரு ஆண்டுகள் எனது பல கவிதைகள் உதயன் சஞ்சீவியிலும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதே.

9.தங்களது பொறுப்பு வாய்ந்த அரச பணி நீங்கள் கவிதைத் துறையில் தீவிரமாக ஈடுபடுவதற்கு தடைக்கல்லாக இருக்கிறதா?


பிரதேச செயலர் என்ற பதவி கடமையின் நிமித்தம் நான் ஏற்றுக் கொண்டது. பிரதேச செயலர், மற்றும் கவிஞன் என்பவற்றை நான் குளப்பிக் கொள்வதில்லை. அப்பப்போ அதுவதுவாக இருக்கிறேன். வேலைப்பழு, வாழ்வின் நெருக்கடிகள், முடிவுறாத மக்களின் பிரச்சனைகள், சூழல் அழுத்தங்கள் என்பவற்றின் போதும் எனக்குள் இருக்கும் ‘கவிக்குரல் அல்லது கவிஞன்’ தன்னை வெளிப்படுத்தும் நேரமெல்லாமும் நான் அந்த ‘கவிக்குரலிடம் அல்லது கவிஞனிடம்’ என்னை ஒப்புக் கொடுக்கிறேன். இன்றைய யதார்த்தத்தில் எவருமே ‘முழுமையான கவிஞனாக மட்டும்’ வாழ முடியாது. கவிதைக்கான சூழல் இல்லாத போது தோன்றும் சில கவிதைப் பொறிகளை, கவிமின்னல்களை, கவிப் பளிச்சீடுகளை சுருக்கமாக எழுதிவைத்து சாவகாசமாக அவற்றுக்கு உருக்கொடுப்பது பெரிய விடயம் இல்லை. இதில் சில பளிச்சீடுகள் உரிய நேரமின்மையால் கருச்சிதைவானதுமுண்டு. எனக்குள் இருக்கும் கவிஞனைச் சாக விடாமல் போஷிப்பதற்கு நல்ல வாசிப்புத் தீனி போடுவது இன்று பெருஞ்சவாலாக இருக்கிறது. அரச பணி எனது சுதந்திரமான எழுத்துப் பணிக்கு சில தடைகளை சில கட்டுப்பாடுகளை இட்டிருப்பது உண்மை.

10.நீங்கள் தற்போது எழுதி வரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள்,இணையங்கள் பற்றி?


ஈழத்தில் வெளிவரும் அனேகமான சஞ்சிகைகளில் என் கவிதைகள் இன்றும் வெளிவருகின்றன. இணையத்தளங்களில் வெளிவருவது மிக மிகக்குறைவு.

11.எது கவிதை? யார் கவிஞன்? தங்கள் பதில்கள் என்ன?


இவற்றுக்கான பதில்களை எத்தனையோ பேர் காலாகாலமாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். எனினும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லோரும் திருப்தியடைக்கூடிய ஒரு பதில் இன்னும் கிடைத்து விடவில்லை. கடவுள் தொடர்பான ஆராய்ச்சிகள் போலத்தான் கவிதை தொடர்பான ஆராய்ச்சிகளும். இக் கேள்விக்கு அவரவர் அறிவு, விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பதில்கள் இனியும் வரத்தான் போகிறது. இவை எவையுமே முடிந்த முடிவான பதில்களாக இருக்க முடியாது. என்னளவில் எது கவிதை? எவன் கவிஞன்? என்பன பற்றி எனக்கு தெளிவான புரிதல், பதில் என்றும் உண்டு. அதற்கு விசுவாசமாகவும் அதற்கு நேர்மையுடனும் நான் இருப்பேன்.

12.கவிதை தவிர்ந்த வேறு ஏதாவது கலை இலக்கிய துறைகளில் ஈடுபடுகிறீர்களா? அல்லது நாட்டம் காட்டுகிறீர்களா?


பாடசாலை நாளில் சித்திரத் துறையில் ஈடுபட்டேன் தற்போது இல்லை. இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. சினிமா இசைதான் என்றாலும் இசைஞானி இளையராஜாவின் தீவிர இசை இரசிகன் நான். நான் இசைக்காத போதும் கேட்டு மயங்குகிற, மனதைக் காற்றாய்ப் பறக்க வைக்கின்ற, நான் யார் என எனக்கு இடைக்கிடை உணர்த்துகிற, இனிய ஞானஇசை என் கவிதை போல என்னை புடம்போட்டுக் கொண்டே இருக்கின்றது.

13.போரின் பின்னான சமகாலத்தில் பலரின் கவிதைகளிலும் போர் தந்த அவலங்கள் பிரதிபலிக்கின்றன. இத் தன்மை எதுவரை நீடிக்கும் எனக் கருதுகிறீர்கள்?


கவிதைகள் காலத்தின் விம்பங்கள் என்பார்கள். போரின் முடிவின் பின் போரின் தாக்கத்திலிருந்து விடுபடாத இக்கணம் வரை…, போர் தந்த அவலங்கள் பாடுபொருளாக இருப்பது தவிர்க்க முடியாதது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நாட்டு நடப்புடன் தொடர்புடையது. நிலைமைகள் மாறும் போது அதற்கேற்ப பாடுபொருள் மாற்றப்படலாம் எனினும் காலங்கடந்து வாழும் கவிஞன் தான் வாழும் காலத்தில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் ஊடாகக் கூட வாழ்வியலின் உண்மைகளை, மனக் கோல விசித்திரங்களை, இயற்கை அவிழ்க்காது வைத்துள்ள இரகசியப் புதிர் முடிச்சுக்களை, நிலையான நீதி நியாய அறச்சிந்தனைகளை, பாடிப் பகிர்ந்து செல்வான். உலக மகாகவிகள், கவிச்சக்கரவர்த்திகள், கவியரசர்கள், இவ்வாறு தான் பாடியிருக்கிறார்கள். இதுவே இன்றைக்கும் பொருந்தும்.

14.கவிதை சார்ந்து தாங்கள் பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்கள்?


எமது நீண்ட தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் என்னும் பெரு விருட்சம் என்னையும் ஒரு கவி விழுதாய் தேர்ந்து எடுத்தது தான் நான் பெற்ற மிகப் பெரிய விருது என்பேன். கவிஞன் என்ற ரீதியில் அவ்வப்போது கௌரவம், அங்கீகாரம், பாராட்டுகள், எனக்கு கிடைத்து வருகின்றன. இவை எனது பட்டம், பதவி, பின்னணி சார்ந்து கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். தமிழ் நாட்டின் பிரபல மூத்த கவிஞர்களின் தலைமையில் கொழும்பு கம்பன் விழாக் கவியரங்கங்களில் கவிபாடும் வாய்ப்புக் கிடைப்பது இவ்வாறு கிடைக்கும் கௌரவங்களில் ஒன்று.

15.இத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள்?


ஒவ்வொரு கவிதை படைக்கும் சந்தர்ப்பமும் எனக்கு மறக்க முடியாத சம்பவங்களே. எவ்விதத் முன்ஏற்பாடுகளுமின்றி ஏதோ ஒரு பளிச்சீடு, ஒரு எண்ணப் பொறி, அதிலிருந்து ஒருவரி, ஒரு அடி, தோன்றி அதிலிருந்து என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்படுகின்றன. அனேகமாக எதை எழுதுவது என்ற எண்ணமே இல்லாமல் ஒரு வெறுமையுடன் கவி யெழுத அமர்ந்து, தானாக எழுதி, எழுதிமுடிய ஏற்படும் அயர்வில் ஆறி, இவ்வாறு எழுதத் நினைத்திருக்க வில்லையே என அதிர்ந்து, எழுதியதில் ஏற்படும் நெருடல் திருத்தி, கவிதையை ஈரம் உலராமல் பார்க்கும் போது கவிதை ஒரு பிரசவமாக நிகழ்ந்திருப்பதனை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். எழுதி முடிய நானெழுதியது எனக்கே பல தடவை வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தாய்க்கு ஒவ்வொரு பிரசவமும் மறக்க முடியாத சம்பவங்களாவது போல் என்கவிதைகள் ஒவ்வொன்றும் எனக்கு மறக்க முடியாத பிரசவ சம்பவங்களே.

16.தங்களது எதிர்காலத் திட்டங்கள்?


ஏதோ ஒரு திசையில் சென்று கொண்டிருந்த நான் எந்த திட்டமிடலும் இல்லாமல் தான் கவிதைத் துறைக்குள் வந்தேன். இன்றும் என்னிடம் கவிதை தொடர்பாக எந்த திட்டங்களும் இல்லை. நூளைக்கும் அஃதே!
ஆனால் கவிதை தன்வழியே என்னை சரியாக இழுத்துக் கொண்டு போகிறது என்பது எனக்குப் புரிகிறது. என் கவிதையிடம் தான் ‘என்ன திட்ட’ மென்று கேட்க வேண்டும். கேட்டுப் பார்க்கிறேன்.

17.கவிஞனுக்கும் வாசகனுக்குமான கவிதையுறவு எவ்வாறு இருக்க வேண்டும்? இவ்வாறான உறவை வளர்ப்பதன் மூலம் எத்தகைய சாதக விளைவுகளை பெற்றுக் கொள்ளலாம்?


கவிதை ஒரு அனுபவம் என்பதைத் தாண்டி வாழ்வை உணர்ச்சிகள் ஊடாக ஒழுங்கு படுத்தி, அறிவை சிந்தனையை சிதறாமல் நல்ல வழியில் நெறிப்படுத்தி மனிதனை ஈடேற்றச் செய்யும் ஒரு கருவியாகிறது என்பது என் அபிப்பிராயம். இது பொதுவாக எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும் எனினும் கலைகளின் அரசியான கவிதைக்கு இது மிக ஏற்புடையதாகிறது. இதனால் தான் உலகமெங்கும் கவிதைக்கு காலகாலமாக முக்கிய இடம் கிடைக்கிறது. கவிதையைக் ‘காரணமாகக்’ கொண்டு நடந்த ‘காரியங்கள்’ பல வரலாற்றில் காணக் கிடைக்கிறது.

 
எனவே கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான கவியுறவு நெருக்கமாகும் போது அதன் பயனும் பெரிதாக இருந்து விடுகிறது. இதனை வரலாற்றில் மதமும் அரசியலும் சரியாக கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறன. இன்றைய நவீன கவிதையில் ஒரு இடைவெளி வந்துவிட்டதாகவும், நவீன கவிதை தேக்கமுற்றிருப்பதாகவும் சிலரால் அங்கலாய்க்கப்படுவதற்கு கவிதைக்கும் வாசகர்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இல்லாமையே பிரதான காரணமாக இருக்கிறது என்பேன். இவ்வாறு ஏற்படும் நல் உறவை ‘ஜனரஞ்சகம்’ என்று ஏளனம் செய்து தவிர்த்த அபத்தமும் நிகழ்ந்திருக்கிறது.

 
இன்றைய நவீன கவிதை அறிவுபூர்வமான, தர்க்கபூர்வமான, தத்துவார்த்தம் மிக்கதாக, பொருட்செறிவுடைய சொற்சித்திரங்களாக புதுஉத்திகளுடன் பல்தளப்பட்டதாக இருப்பதாக, கருதப்படுகின்ற போதும் சிக்கலானதாகவும், குளப்பம்மிகுந்ததாகவும், இருண்மை தன்மையுடையதாகவும், வாசகரிடம் தொற்றும் தன்மை அல்லது அசையும் தன்மையற்றதாகவும் எல்லோரையும் கவரும் தன்மையற்றதாகவும் தனித்து இறுகிக் கிடக்கிறது. இப்படி இறுகிக் கிடப்பது சரியே என்போர், கவிதை எல்லோருக்கும் புரியத் தேவையில்லை என்போர், கவிதையைப் புரிந்துகொள்ள வாசகர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர கவிதை வாசகனை நோக்கிச் செல்லவேண்டியதில்லை என்று மேதாவித்தனம் பேசுவோர் கவிதையின் சமூகப் பயனை புரியாதவர்களே. இன்றைய நவீன கவிதையை பல வாசகர்கள் நெருங்க அஞ்சுகிறார்கள். இயங்காத, அசையாத, தொற்றும் தன்மையில்லாத கவிதையால் சமூகத்துக்கு எந்தப் பலனும் நேர்ந்துவிடப் போவதில்லை. குருதிபோல, மழைபோல, காட்டாறுபோல பாய்ந்து பரவிச் செல்லும் கவிதையால் சமூகத்திற்குப் பெரும் பயன் உண்டு என்பேன்.


18.தற்கால இலக்கியச் சூழலில் விமர்சனம் என்ற பேரில் பரஸ்பரம் மோதல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து?

ஓவ்வொருவரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிறார்கள். ஒவ்வொரு கருத்தை, கொள்கையை, குழுமத்தை சார்ந்தவர்கள் தம் படைப்பே சிறந்தது என்றும் அது தவிர்ந்த ஏனையவற்றை மட்டந்தட்டி ஏனையவர்களின் படைப்புகள் ‘படைப்புகளே அல்ல’ என்றும் அகங்காரத்துடன் அதற்கு ஆயிரம் கற்பிதங்களை கற்பிக்க முயல்கிறார்கள். உ-ம் பின்நவீனத்துவச் சிந்தனைக்குட்பட்ட படைப்புக்கள் மட்டுமே படைப்புகள் என்போர் ஏனைய சிந்தனைகளுக்குட்பட்ட படைப்புகள் எத்தகைய அற்புதங்கள் எனினும் அவை அபத்தங்களே என முடிவுகட்டுகிறார்கள். ஒருவரை, அவர் படைப்பை மற்றவர் ஏற்றுக் கொள்வதே இல்லை. மனித உரிமை, சமநீதி பற்றிய சிந்தனை வலுப்பெற்றிருக்கும் இந்நாளில் இலக்கிய படைப்புலக விமர்சகர்கள் எனத் தமைத்தாமே சொல்லிக் கொள்பவர்களிடந்தான் மிகப்பெரிய அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஒரு படைப்பை, படைப்பாளியை மறுதலிக்கும் சர்வாதிகாரம் நிலவுகிறது. இதேநேரம் தமக்கு வேண்டியவர்களின் சாதாரண படைப்பையும் உலகத்தரமானது என்று போலியாய் நிலைநிறுத்தும் அநாகரிகமும் அரங்கேறுகிறது. இது ஒவ்வொரு குழுக்களிடையே தொடர் தூஷிப்பை வளர்ப்பதாகவும் நிரந்தரப் பகைமையை தூண்டுவதாகவும் மாறியிருக்கிறது.

 
சகிப்புத்தன்மை, அனைவரது கருத்துரிமையை படைப்பு சுதந்திரத்தை மதித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எமது அடையாளங்களை தொலையாமல் காத்துக் கொள்ள முயல்கின்றமை போன்ற பண்புகள் தற்போது அருகிவிட்டன.இவ் விமர்சகர்;களின் குத்துவெட்டுகளால் எதுவும் நிகழப் போவதில்லை. காலத்தின் விமர்சனம் இவர்களையும் விட்டுவைக்காது என்பதை மறந்த இவர்கள் உண்மையான நடுநிலையான விமர்சகர்களே அல்ல.

 
ஏதோ உள்நோக்கோடும், அரசியல் சுயஇலாப எண்ணத்துடனும் தமைத்தாமே விமர்சகர் எனக்கூறும் இவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லை. இவர்களின் தகுதி என்ன? இவர்களை யார் விமர்சகர்களாக்கினார்கள் என்பவை எவருமறியாதது. இதில் வேடிக்கை என்னவெனில், படைப்பாளிகள் ஆக முயன்று ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்று திரும்பி தம் இருப்பைத் தக்க வைக்க விமர்சகர்களானவர்களே இன்று அனேகர்.ஆனால் நடுநிலையான, பக்கச்சார்பற்ற, நீதியான விமர்சனம் படைப்பாளிகளுக்கும், படைப்புகளுக்கும் நல்வழிகாட்டும் கலங்கரையாக திகழும் என்றால் மிகையில்லை.

19.இதுவரை நீங்கள் எழுதிய பலநூறு கவிதைகளில் மிகவும் ஆத்ம திருப்தியை ஏற்படுத்திய கவிதை எது?

மிகவும் ஆத்ம திருப்தி ஏற்படுத்திய எனது சிறந்த கவிதையை இன்னும் நான் எழுதவில்லை.

20.இந்தச் செவ்வியினூடாக நீங்கள் கூற விரும்புவது?

கவிதையால் நாம் வாழலாமே தவிர கவிதையை நாம் வாழவைக்கிறோம் என்ற கூற்றைப்போல் அபத்தம் எதுவும் இல்லை. கவிதை கடவுள் போன்றது அல்லது கடவுள் , இயற்கையின் ஒரு தூதன் போன்றதே கவிதை என கருதுகிறேன். சிறந்த கவிதை மந்திரம் போல அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்பேன். இந்த மரியாதையுடன் தான் நான் கவிதையை அணுகுகிறேன். பலர் கருதுவதுபோல் கவிதை அவரவர் உரிமைப் பொருளோ அல்லது அவரவர் விளையாட்டுப் பொருளோ அல்ல. சிறந்த கவிதை காலங் கடந்து உலகுள்ளவரை வாழும். உண்மையான நல்ல கவிதைகளை கண்டு உறவுகொள்வோம். எம்மை வாழவைக்கும் கவிதைக்கு தொண்டாற்றுவோம். எங்களையும் எங்கள் சமூகத்தையும் எம்நிலத்தையும் இந்த உலகத்தையும் கவிதையால் உயர்த்த முயல்வோம்.

Leave a Reply