இலங்கைக்கலைஞர் வலைத்தளத்திற்க்கு வழங்கிய நேர்காணல்

1.உங்களைப் பற்றி ஓர் அறிமுகத்தைத் தருவீர்களா?

என்னைப் பற்றிப் பிறர்தான் கூறவேண்டுமே தவிர நான் கூறக்கூடாது. எனினும் அறிமுகம் என்ற ரீதியில் சுருக்கமாக, நான் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்.இந்துக் கல்லூரியில் கற்றபோது கவிதைத் துறையில் இயல்பாக ஆர்வமேற்பட்டு இன்று வரையில் அதனுடன் ஊடாடி வருகிறேன். இன்று எனது உயிர் மூச்சு கவிதையே. என்வாழ்வின் அர்த்தம் ஒரு கவிஞனாக வாழ்வதே. கவிதை கடலளவாகப் பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் நான் கண்டெடுத்தது சில நுரைகளே, சில துளிகளே. காலத்தை வெல்லும், காலத்தை மாற்றும் கவிஞனென மாறுவது, எமது நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் நானும் நிரந்தர விழுதொன்றாக ஆவது, எனது கனவு. அதை அடைய கணமும் முயல்கிறேன்.என் வாழ்வில் கவிஞனாக நான் பார்க்கப் படுவதையே, பேசப்படுவதையே விரும்புகிறேன்.ஏனையவை இரண்டாம் பட்சமே.

2.உங்களது இலக்கியப் பிரவேசம் குறித்த தொடக்கப்புள்ளி எவ்வாறு அமைந்தது.?

க.பொ.த(சா.த) இலேயே சில கவிதைகளை எழுதிய ஞாபகம்.அவை கைவசமின்றில்லை. உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றபோது 1992 ஆம் ஆண்டில் தற்செயலாக, கல்லூரி மட்ட நிகழ்வுகளில் கவிதை பற்றிய எதுவித அறிமுகமுமில்லாமல் ஏதோ ஒரு உந்துதலில் கவிதை என ஏதோ புனைந்து வாசித்தேன்.அதில் ஒரு தனித்தன்மை இருப்பதாக நண்பர்கள் ஊக்கப் படுத்தினார்கள்.தொடர்ந்து கல்லூரி மட்டத்தில்இரு கவியரங்குகளில் பங்கெடுத்தேன். அதற்கு யாழ் இந்துக் கல்லூரியின் அக்கால தமிழாசானும் பிரபல கவிஞருமான ச.வே.பஞ்சாட்சரம் ஊக்கமளித்தார். என் கன்னிக் கவியரங்கிலும் எனக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டு தானே தலைமையுந் தாங்கினார். அவற்றில் கிடைத்த பாராட்டு, கவிதையைக் காதலிக்க வைத்தது.அவற்றில் ஒரு கவியரங்கைப் பார்வையிட்டகம்பவாரிதி இ.ஜெயராஜ் அறிமுகத்தில் அகில இலங்கைக் கம்பன் கழகத்துடன் தொடர்பு ஏற்பட்டு 1993இல் அவர்கள் வைத்த கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன்.எனக்கு முதல் மூன்று பரிசுகளில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவ்ஆண்டுக் கம்பன் விழாக் கவியரங்கில் கவிதை பாட வாய்ப்பை கம்பவாரிதி எனக்கு வழங்கினார்.தொடர்ந்து பல கவியரங்குகளில் கலந்து கொள்ள முடிந்தது. இதன்பின் ஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையனிடம் வீடுதேடிச் சென்று அவரின் அணுக்கத் தொண்டனாகி கவிதையை,கவிதை மரபை, யாப்பிலக்கணத்தைக் கற்றேன். இது எனது கடந்தகாலச் சரிதம். இதில் எதுதான் எனது இலக்கியப் பிரவேசத்தின் தொடக்கப் புள்ளியோ புரியவில்லை.

3.உங்களது துறைசார்ந்த அல்லது அத்துறையின் இயங்குநிலை பற்றிய வெளிப்படுத்தல்களைத் தர முடியுமா?

பல கவியரங்குகளில் கலந்த கொண்டு அரங்க ஆற்றுகையாக கவிதைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன.;,1996ம் ஆண்டு இலங்கை வானொலியில் ‘இதய சங்கமம்’,‘கவிதைக் கலசம்’ நிகழ்ச்சிகள் மூலமும் எனது பல கவிதைகள் ஒலிபரப்பப்பட்டன. வலிகாம இடம்பெயர்வின் பின் மீளக்குடியமர்வைத் தொடர்ந்து உதயன்,சஞ்சீவி, உள்ளுர், வெளியூர், வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பல கவிதைகள் வெளிவந்தன.பிரசுரமாகாத நூற்றுக்கணக்கான கவிதைகள் என்னிடம் உள்ளன.

4.உங்களது வளர்ச்சியில் அக்கறை காட்டிய அல்லது உந்து சக்தியாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையோரின் பங்கு எவ்வாறு அமைந்தது.
கவிஞரும் ஆசானுமாகிய ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் என்னைக் கவிதைத் துறையில் அறிமுகப்படுத்தியவர்.கவிஞர் இ. முருகையன் அவர்கள் எனக்கு கவிதை யாப்பிலக்கணம் பற்றியும், கவிதை தொடர்பான இன்னோரன்ன விடயங்களையும், அதன் திட்ப நுட்பங்களையும், நெளிவு சுழிவுகளையும் அறியத் தந்தார். ஏற்கனவே நான் க.பொ.த.(சா.த) கற்றபோது மூதறிஞர் க. சொக்கலிங்கம்(சொக்கன்) எனக்கு தமிழார்வத்தை ஏற்படுத்தியிருந்தார். கம்பவாரிதி இ.ஜெயராஜும் கழக நண்பர்களும் என் கவிதைகளை அரங்கேற்றினார்கள். கவிஞர் சோ.பத்மநாதன், கவிஞர் கல்வயல் குமாரசாமி, பேராசான் சிவராமலிங்கம் ஆகியோர் ஆசீர்வதித்தார்கள். ‘சாளரம்’சஞ்சிகை ஆசிரியர் விவேக் எனது கவிதையிலொன்றை முதலில் தனது சஞ்சிகையில் பரிசுரித்து உற்சாகமூட்டினார்.‘சிரித்திரன்’ சிவஞான சுந்தரம் ஐயா அவர்கள் என் கவிதைகள் சிலவற்றுக்குக் களந்தந்தார்.எனது ஆரம்பகால கவிதை நண்பர்கள் ப.நேசராசா,சி. தயாபரன் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தினர். யாழ் மீள்குடியேற்றத்தின் பின் உதயன் சஞ்சீவி ஆசிரியராகவிருந்த ந.வித்யாதரன்,‘பொஸ்க்கோ’ பதிப்பக உரிமையாளரும் ‘சுந்தரன்’ஆசிரியருமான ம.சி.சந்திரபோஸ்,இலங்கை வானொலியைச் சேர்ந்த ஆர்.யோகராஜன், சி.சிவகுமார், இ.தயானந்தா போன்றோர் என் படைப்புகளுக்கு களந்தந்தனர்.

5.ஆரம்பக் கல்வியும் அதன் வளர்ச்சியும் எவ்வாறு அமைந்தன?

ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையரக்;கரசி வித்தியாலயத்தில் கற்றேன். 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து யாழ்.இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் வரை கற்றேன்.பின் யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகி உயிரியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றேன். பின் என் கடமையின் நிமித்தம் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘குடித்தொகை அபிவிருத்தியில்’ முது கலைமாணிப் பட்டம் பெற்றேன்.

6.உங்களது இலக்கியப் பயணத்தில் எந்தெந்தத் துறைகளைத் தெரிவு செய்துள்ளீர்கள்?

கவிதைத் துறைதான் என்னைத் தெரிவு செய்தது. எனவே நான் கவிதையுடன் மட்டுந்தான் பூரணமாக ஊடாடுகிறேன். எனினும் இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 5ம் ஆண்டுவரை மிருதங்கம் பயின்றிருக்கிறேன். எனினும் பின் இத்துறை என்னை விரும்பவில்லை. நான் இசைப்படைப்பாளன் அல்ல,இசை இரசிகன். என் கவிதையளவுக்கு இசையும் என்னைப் பண்படுத்தியிருக்கிறது என்று கருதுகிறேன். கல்லூரிக் காலத்தில் ஓவியத் துறையில் சிறிது ஆர்வமிருந்தது.

7.இது வரை உங்களால் வெளிக்கொணரப்பட்ட படைப்பிலக்கியங்கள்?

எனது பல கவிதைகள் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டும் உள்ளன.எனது கவிதைத் தொகுதிகள் மூன்று இதுவரை வெளிவந்துள்ளன.
1.கனவுகளின் எல்லை (2001)
2.கைகளுக்குள் சிக்காத காற்று(2004)
3.எழுதாத ஒரு கவிதை (2013)

8.நீங்கள் ஒரு படைப்பாளி என்ற வகையில் உங்களது படைப்புகள் குறித்த கருத்து நிலை எவ்வாறு உள்ளதென்பதைக் கூற முடியுமா?

படைப்பு என்னைக் கருவியாகக் கொண்டு தன்னைப் படைத்துக் கொள்கிறது. ஒரு கவிதையை நான் எந்தத் திட்டமிடலும் இல்லாமலேயே எழுதுகிறேன்.கவிதையை எழுத அமரும் போது என் எண்ணம் வெறுமையாகவே இருக்கிறது. கவிதையை எழுதி முடித்தபின்பு இந்தக் கவிதையை நான் எழுத எண்ணியிருக்கவில்லையே என்ற வியப்பு அனேகமாக ஒவ்வொருமுறையும் ஏற்படுகிறது. என் கவிதை தானே தன்னை வடிவமைத்துக் கொள்வதாகவே கருதுகிறேன். இதனைத்தான் எனது வேறொரு நேர்காணலில் “கவிதை என்னைக் கருவியாகக் கொண்டு தன்னை எழுதுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தேன்.இது வரை எழுதிய கவிதைகளை மீளப் படிக்கும் போது இவை எப்படிச் சாத்தியமாயின என்ற வியப்பும் இவை நானா எழுதியவை என்ற கேள்விகளும் எனக்குள் எழுந்திருக்கின்றன. இதனை என்னைப் பெரிய மேதாவி எனக்காட்டுவதற்காகவோ, ஞான நிலையில் நின்று தான் கவிதை செய்கிறேன் என்று கூறிக் கொள்வதற்காகவோ நிச்சயமாகச் சொல்லவில்லை. கவிதையுடனான பந்தம் எனக்கு இயல்பாக ஏற்பட்டது. அது தொடர்பான பூரண விளக்கம் என் வார்த்தைகளால் அல்லது சொற்களால் உரைக்கப்படமுடியாததாக உணர்வால் மட்டும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் என்படைப்புகள் பற்றிய கருத்து நிலை பற்றி என்னதான் கூறமுடியும்? எனது தனிப்பட்ட கருத்துக்கள், விருப்பு வெறுப்புகள் என் கவிதைகளில் வந்து போயிருந்தாலும் அவ்வப்போது நான் எழுதும் கவிதைகளின் கருத்துநிலைக்குக் காரணம் அக் கவிதைகளே என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

9.கிடைத்த பரிசுகள் பாராட்டுகள் பற்றி கூறுங்கள்?

கம்பன் விழா கவியரங்குகளில் கவிதைபாடக் கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த முக்கியமான பரிசு.1994 இல் யாழ் மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவினால் நல்லூர் உற்சவகாலத்தில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதற்பரிசாய் தங்கப் பதக்கம் வென்றேன். இதனை எனது ஏனைய நேர்காணல்களில் பதிவு செய்யத் தவறிவிட்டேன். 1995இல் கலைஞரும் விமர்சகருமான அ.யேசுராசா நடத்திய ‘கவிதை’ இதழின் ஓராண்டுக் கவிதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றேன். எனது தனித்தனிக் கவிதைகள் சிலபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. அரச ஊழியர் ஆக்கத்திறன் போட்டியிலும் எனது கவிதைகள் பரிசு பெற்றன.விஞ்ஞான பீடத்தில் கற்ற போது மூன்று வருடங்களிலும் நிகழ்ந்த விஞ்ஞான வார நிகழ்வுகளில் கவிதையில் முதற்பரிசு கிடைத்தது.எனது கவிதைத் தொகுதியான ‘கனவுகளின் எல்லை’ வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசைப் பெற்றது.கைகளுக்குள் சிக்காத காற்று இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசைப் பெற்றது.இத் தொகுதி 2004 இல் வெளிவந்த சிறந்த கவிதைத் தொகுதி என தமிழ்நாட்டின் பிரபல படைப்பாளி அமரர் சுஜாதாவால் பாராட்டப் பெற்றது.
எனது கவிதைகளும் கவிதைத்தொகுதிகளும் பல பாராட்டுகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு மேற்செல்லும் மனநிலை எனக்குண்டு.

10.உங்கள் இலக்கியப் பயணம் எந்த படைப்பாளியை அடியொற்றியது?

ஒரு படைப்பாளியை மட்டும் அடியொற்றியதாகக் கூற முடியாது.கவிதைத் துறையில் ஈடுபாடு கொண்டபின் சில காலம் கவிதைகளுடனேயே கரைந்து போயிருந்தேன். இக்காலத்தில் கவிஞர் முருகையனிடம் கவிதை நுட்பங்களைப் பயின்று கொண்டேன். அவரும் ‘குரு- சீடன்’ மனப்பாங்கின்றி நண்பனுடன் பழகுவது போல எனக்கு கவிதை கற்பித்தார். நாம் பல கவிதைகளை வாசித்து இரசித்து உருசித் சுவைத்தோம்.பல வகையான கவிதைகளுடன் ஊடாடினோம். இதனைத் தாண்டி எனது தனிப்பட்ட ஆர்வம், விருப்பம், இரசனை காரணமாக பொருளாதாரத்தில் கஷ்டமான சூழலிலும் பல கவிதை நூல்களை வாங்கி இரவு பகலாகப் படித்தேன். தேடித்திரிந்து எனக்கு பிடித்த கவிதைகளை வாசித்தேன். நினையாப் பிரகாரம் பல கவிதை நூல்கள் எனக்கு வந்தும் வாய்த்தன.
தமிழில் எனக்கு ஆதர்சமானவர்கள் எண்ணற்றோர் இருந்தார்கள். அவர்களின் பல தனித்தவமான இயல்புகள் சிலவேளை என்கவிதைகளிலும் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். வள்ளுவன், கம்பன், மாணிக்கவாசகர், அருணகிரியார்,பட்டினத்தார் போன்றோரின் பனுவல்கள் என்னைக் கவர்ந்தவை.இந்த நூற்றாண்டின் பாரதி, கண்ணதாசன்,ஆகியோரின் கவிதைகளும் ஈழத்தில் மகாகவி, முருகையன்,புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, சோ.பத்மநாதன், சு.வில்வரெத்தினம்,சண்முகம் சிவலிங்கம்,சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி எனப்பலரும் என் கவிதையில் தாக்கமேற்படுத்தியவர்கள். குறிப்பாகமகாகவி,முருகையன், புதுவை இரத்தினதுரை ஆகியோரின் கவிதைப் பாணியும், அவர்களின் பேச்சோசைப் பாங்கும், இலாவகமும், கவிதையோட்டமும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

11.சமகால இலக்கிய வெளிப்படுத்தல்களின் போது உங்களுக்கு இருக்கக் கூடிய தடைகள் அல்லது சவால்கள் என எவற்றைக் கருதுகிறீர்கள்?

என்கவிதையை நான் எழுதுகிறேன். அது ஒரு தவம்போல நிதமும் தொடர்கிறது.எப்படி பெருவாரியாக எழுத முடியும் என்று கேட்கிறார்கள். என்னால் முடிகிறது, எனக்கு வருகிறது நான் எழுதுகிறேன். எனக்குத் தடைகள் சவால்கள் இல்லை. என் கவிதைகளை விரும்பி பிரசுரிக்கும் சஞ்சிகைகள் பத்திரிகைள் உள்ளன. என் கவிதைகளை இரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என் கவிதைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை, அவற்றை விரும்பாதவர்களைப் பற்றி எனக்கு எள்ளளவும் கவலையிவ்லை.நான் எவருக்காகவும், எந்த அரசியலுக்காகவும், எவரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்றும், எவர்களது அங்கீகாரத்துக்காகவும் எழுதுவதில்லை. என் கவிதை இடும் கட்டளைப் படி, எனக்கு காலமிடும் கட்டளைப்படி எழுதுகிறேன். காலத்தின் விமர்சனமே, காலத்தின் தீர்ப்பே உறுதியானது என நம்புகிறேன். எனவே எந்த தடைக்கும் சவாலுக்கும் நான் அஞ்சுவதில்லை.

12.வெகுஜன ஊடகங்களின் பாதிப்பு முனைப்புப் பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு காத்திரமான எழுத்தாளன் எவ்வாறு தனது எழுத்துப்பணியை முன்னெடுக்கலாம் என்பதைக் கூறுங்கள்.

தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் மிக நீண்டது. மிகமிகச் செழுமையானது. பல ஆயிரம் ஆண்டுகாலமாக எமது கவிதைகளை எந்த ஊடகங்கள் வளர்த்தெடுத்தன? இன்று சில ஆண்டுகளிலேயே ஆக்கங்கள் செல்லரித்துக் காணாமற் போகும் போது கம்பனின் கவிதை பாரதியின் கவிதை எனபவற்றின் வீச்சானது காலத்தால் வளர்தெடுக்கப்பட்டு இன்றும் காக்கப்படுவதைக் கண்டு மலைக்கிறோம். இன்று ஊடகங்களில் புற்றீசல்போலப் பெருகி வரும் ‘கவிதைகள் எனச் சொல்லப்படுபவற்றில்’ எத்தனைதான் வாழும் தகவோடு விளங்குகின்றன? இவைஎத்தனை பேரைச் சென்றடைகின்றன? எத்தனைபேரில் தொற்றுதலடைகின்றன? எத்தனை பேரில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன? எனவே ஊடகங்களால் உண்மையான நல்ல படைப்பை சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. இன்றும் உண்மையான, நல்ல, உயிர்புள்ள, படைப்புகளின் பின்தான் ஊடகங்களும் நிற்கின்றன. ஒரு சத்தியக் கலைஞனின்@ படைப்பாளியின்@ உண்மையான, உயர்ந்த, தனித்துவம்மிக்க, மண்வாசமூறிய,பாரம்பரியத்தைப் பேணுகிற, சில காலச் செய்திகளை மட்டும் பேசாமல் காலங்கடந்து வாழும் வாழ்வியலின்சாரங்களைப் பேசுகின்ற, படைப்பை எந்த ஊடகமும் வரவேற்றே தீரும். போலியாக, பொய்மை புனைந்த, எவரையும் பிரதிபண்ணுகிற, தனித்துவமில்லாத, மண்வாசமில்லாத, பாரம்பரியத்தைப் பேணாத, வெறும் சம்பவக் கோர்வைகளாக மிஞ்சும் படைப்புகள் காலத்தின் முன் மட்டுமல்ல ஊடகங்களின் முன்னும் தோற்றுத்தான் போகும்.

13.விமர்சனங்கள் எவ்வாறு ஒரு படைப்பாளியைச் செதுக்குகின்றன? உங்களுக்குக் கிடைத்த அல்லது உங்கள் படைப்புகள் பற்றிய இலக்கிய விமர்சனங்கள் எவ்வாறு உங்களை வழிப்படுத்துகின்றன?
விமர்சனங்கள் இன்று நடுநிலையாய் இல்லை. எமது தமிழ் மரபில் விமர்சனஞ் செய்யத் தகுதியுடையவன் துறவியாக, ஞானியாக, யோகியாக இருக்க வேண்டும். இதற்குக் காரணம் இவர்கள் தான் தனிப்பட்ட விருப்பு வெறுப்;பு அற்றவர்கள், நடுநிலையானவர்கள், மெய்யுணர்ந்தவர்கள், எதிலும் சரி பிழை சொல்லும் தகைமை பெற்றவர்கள். இன்று விமர்சனம் என்பது ஒரு அரசியல் பின்புலத்துடனும்,தமது வட்டம், தமது குழுமம், தமது சமூகம் சாதி இன, அடையாளங்ளை முன்னிலைப்படுத்துவனவாகவும் தமக்குகந்ததை அற்புதம் என்றும் உவப்பில்லாததை அற்பம் என்றும் வாய்கூசாது ஒப்பிக்கும் ஒரு அபத்தமாகவும் காணப்படுகிறது. இன்று எந்த விமர்சகனும் தம்தம் விருப்பு வெறுப்புக்களையே, தம் மன அவசங்களையே விமர்சனம் என்ற பேரில் கொட்டித் தீர்க்கிறான்.ஒரு விமர்சகன் பாராட்டிவிட்டான் என்பதற்காக அது உயர்ந்த படைப்பென்றோ பாராட்டவில்லை என்பதற்காக அத தாழ்ந்த படைப்பென்றோ ஆகிவிடாது. இதனால், இன்று விமர்சனம் அர்த்தமற்ற தொன்றாக மாறியிருக்கிறது.தமக்குப் பிடிக்காதவர்களின் படைப்பிலுள்ள நல்ல விடயங்களை எந்த விமர்சகர்களும் பார்ப்பதில்லை.குறைந்தபட்சம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடக்கக் கூட இவர்கள் தயாரில்லை. நடுநிலையான விமர்சனங்கள் வராதவரை விமர்சனத்தால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.
நேர்மையான நீதியான நடுநிலையான விமர்சனம் நிச்சயம் ஒரு படைப்பைச் செதுக்கும். காலத்தின் விமர்சனத்துக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் நல்ல படைப்பாளிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

14.ஒரு படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வரையறை ஏதாவது இருக்கிறதா?

இந்த ஒரு உயிரினம் மட்டுந்தான் இவ்வுலகில் வாழலாம் என்ற வரையறை எதுவும் இருக்கிறதா? ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை எத்தனை உயிர்கள், எத்தனை விதங்கள்.?எத்தனை பல்வகைமை? ஆனால், எமக்கு பயன்படுபவற்றை மட்டுமே நாம் பார்க்கிறோம்.எமக்கு தேவையற்றது இயற்கைக்குத் தேவையாயிருக்க வேண்டும்.இல்லையாயின் அது இயற்கையிலிருந்து அழிந்தே போயிருக்கும்.
இது போலத்தான் இலக்கியப் படைப்புகளும். அவை பல்வகைப் பட்டவை,பல் திறப்பட்டவை. எனினும், எப்படி உயிரிகள் தினமும் கணமும் தம்மில் மாற்றங்களுக்கு உள்ளாகின்றனவோ அதுபோலத்தான் படைப்பிலக்கிய வரையறைகளும் சிறுசிறு மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கும் ஓவ்வொரு படைப்புக்கும் ஒரு தனித்துவம், அடையாளம், அடிப்படை என்பன இருந்தே ஆக வேண்டும்.எனினும் அவை காலத்திற்கு காலம் மாற்றங்களுக்கு உட்பட்டவாறும் இருக்கும். எதுவும் உச்சமான, முழுமைபெற்றுவிட்ட, வடிவம் என்று இல்லை. உதாரணமாக கவிதை இன்றிருக்கும் நிலையில் சங்க காலத்தில் இருக்கவில்லை. காலத்துக்குக் காலம் சில கழிந்தும் சில இணைந்துமே தமிழ்க்கவிதை வடிவம் இன்றைய நிலைக்கு நகர்ந்து வந்திருக்கிறது. என்றாலும் ‘கவிதை’ என்ற ஒரு தனித்துவப்பண்பு அன்றும் இருந்தது.இன்றும் இருந்து வருகிறது. எனவே ஒரு படைப்பிலக்கியம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க முடியாது. அதேநேரம் எந்த வரையறையும் தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும், ஆதாவது எப்படியும் படைப்பிலக்கியம் இருக்கலாம் என்று கூறிவிடவும் முடியாது.

15.ஒட்டுமொத்த இலக்கியம் குறித்த உங்களது பொதுவான கருத்து நிலை எவ்வாறு உள்ளது?

மனிதன் அறிவாலும் உணர்ச்சியாலும் ஆளப்படுபவன்.உணர்ச்சி வசப்படும் மனிதனை ஆற்றுப்படுத்தும் காரணிகளில் முக்கியமானது இலக்கியம். அதனால்தான் இன்றுவரை உலகெங்கும், மனித வரலாறும்- இலக்கிய வரலாறும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதன் என்னதான் அதிநவீன விஞ்ஞானத்தின் கைப் பொம்மையாக மாறினாலும் அவன் உணர்ச்சிகளை விட்டொழிந்துவிடப் போவதில்லை. எனவே உணர்ச்சிகள் இருக்கும்வரை ,உணர்ச்சிமிகு மனிதன் உலகில் இருக்கும் வரை இலக்கியங்களின் தேவையும் இருந்துகொண்டே இருக்கும்.

16.எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொதுவாக நீங்கள் சொல்லும் கருத்து யாது?

நான் அரசியல்வாதியோ, தத்துவவாதியோ, வழிகாட்டியோ அல்ல. பொதுவாக, மேலோட்டமாக படைப்பாளிகளை எடைபோடுவது,படைப்புக்களை குறைகூறி ஒதுக்கித்தள்ளுவது. உச்சமென்று கொண்டாடிக் கோபுரத்தில் ஏற்றுவது எல்லாம் பொறுப்பமிக்க செயல்கள் என்ற கூறமாட்டேன். படைப்பாளிகள் விமர்சனங்களில் ஏற்கக் கூடியவற்றை ஏற்று தேவையற்றதை தவிர்த்து மேற்செல்ல வேண்டும். விமர்சனங்கள் படைப்புகளுக்காவே அன்றி விமர்சனங்களுக்காக படைப்புக்கள் இல்லை என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும். இன்றைய சில இளம்படைப்பாளிகள் விமர்சகர் விரும்பும் படியாக, அவர்களுக்கு ஏற்ப, தம் படைப்பைப் படைத்து பாராட்டு மகுடத்தைச் சூடிக் கொள்கிறார்கள். காலம் உண்மையான,மிக நடுநிலையான, நேர்மையான தீர்ப்பையே அன்றும் தந்தது.இன்றும் தருகிறது. நாளையும் தரும். எனவே படைப்பாளிகள் உண்மைக்கு விசுவாசமாக, தம் உள்ளத்துக்கு விசவாசமாக, காலத்துக்கு – இயற்கைக்கு விசுவாசமாக தம் படைப்பகளைப் படைக்க வேண்டும். (கடவுள் நம்பிக்கையுடையோர் கடவுளையும் சேர்த்துக் கொள்ளலாம்.) மனிதனை, மனிதத்தை, வாழ்வியல் உண்மையை, சத்தியத்தை மீட்டெடுக்கத் தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் மகத்தானவன் தான்.

17.தாங்கள் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

மக்கள் எதுவும் தெரியாத மடையர்கள்,‘மக்கள் இலக்கியம்’ என்ற ஒன்று தேவையில்லை, தம்மைப் போல் புத்திஜீவிகளுக்கு புரியும் இலக்கியமே போதும் எனச்சில ‘எல்லாம் தெரிந்த நவீன மேதைகள்’எனத் தம்மைத்தாமே சொல்வோர் கூறித்திரிகிறார்கள். மக்கள் தான் இந்த உலகின் அடிப்படைச் சக்தி.மக்களை அறியாத, மக்களைப் புரியாத, மக்களுக்குப் படைக்கப்படாத, மக்களைப் புறக்கணித்த எந்தப் படைப்பும் நிலைத்து வாழமாட்டாது.
அதே நேரம், இப்போது மக்களும் இலக்கியப் பரிச்சயம் பெற வேண்டும் என்பது முக்கியமானது என்பேன்.
முன்னோர்கள் ஏதோ வகையில் தமது இலக்கியங்களுடன் தம் வாழ்க்கைக்காலம் முழுதும் பரிச்சயம் கொண்டிருந்தார்கள்.இது உலகம் முழுவதற்கும் பொருந்தும். இயன்ற அளவு அவற்றைப் பின்பற்றி ஒழுகினார்கள்.அதனால் அவர்களின் வாழ்வில் இன்றிருப்பதைப் போல் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய நவீன வாழ்வில் மக்கள் நிதமும் சந்திக்கும் ஆயிரம் பிரச்சனைகளுக்கும் அவர்களுக்கு வழிகாட்ட நல்ல உண்மையான ஆன்மீகமோ,நல்ல இலக்கியமோ துணைபுரிவதாகத் தெரியவில்லை. இன்று எல்லாம் வியாபார மயமாகிவிட்டன. இதனால்தான் மனநிம்மதியில்லாத, மனபலமில்லாத, வாழ்க்கைச் சவாலை சமாளிக்கத் துணிவில்லாத, மக்கள் இன்று அனேகராகிவிட்டார்கள். போலிச் சாமியார்களும் போலிப் படைப்பாளிகளும் இவர்களின் நிலையறிந்து இவர்களிடமிருந்து பணம் பிடுங்குவதிலேயே குறியாயிருக்கிறார்கள். மக்கள் இலக்கிய நாட்டமுடையவர்களாக மாறின் வாழ்க்கைச் சவால்களை சுலபமாகச் சந்திக்க முடியும்.
உணர்ச்சிகளை ஆற்றுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நல்ல வழிகாட்டும் இலக்கியங்களைப் பயின்று அவற்றின் வழி நின்று மக்கள் நிம்மதியான, அமைதியான. இன்பமான, வாழ்வு வாழ வேண்டும்; என்பதே ஒரு சிறு படைப்பாளியான எனது வேண்டுதல்.

Leave a Reply