தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்

குடாரப்பு மண்ணின் தவப்புதல்வனும், தமிழ் சைவ மரபிலக்கியத் துறையின் மறுமலர்ச்சிக்காக ஓயாமல் உழைத்து வருபவரும், எண்பது வயது இளைஞரும், ஆன அன்பர் கலாபூஷணம் ‘குடாநீரூரான்’ சி.பசுபதி அவர்களது 15 ஆவது சமயம் சார் நூலாக ‘நாகர்கோயில் கண்ணகி அம்மன் மான்மியம்’ வெளிவருவதையிட்டு பெருமகிழ்வவடைகின்றேன்

எமது சைவ மரபிலக்கியங்களில் வழிவழியாக போற்றப்பட்டு வந்த இன்னோரன்ன துறைகளில் மிக முக்கியமான ஒரு இலக்கிய வடிவம் ‘தலபுராணம்’ஆகும். தலபுராணங்களின் ஊடாகவே பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சைவ ஆலயங்களின் வரலாறுகளை இன்றும் தெளிவாக நாம் அறியக் கூடியதாக இருக்கிறது என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

ஒவ்வொரு ஆலயத்தினதும் தோற்றங்களை, அவற்றின் சூழல்களை, ஆலய கட்டமைப்புகளை, ஆலய சீர் சிறப்பு பெருமைகளை, அங்கங்கு நடந்தேறிய அற்புத அதிசயங்களை, தமிழ்க்கவிதையின் வெவ்வேறு யாப்பு வடிவங்களை கையாண்டு சமய குரவர்கள் முதல் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த புலவர்களும் கவிஞர்களும் தேவாரங்களாகவும் தலபுராணங்களாகவும் பாடிச் சென்றிருக்கிறார்கள். இவை அந்தந்த ஆலயங்களில் நீண்ட நெடிய வரலாற்றை அற்புதங்களை என்றும் எடுத்தியம்பும் சொத்தாவணங்களாக, சொல்வெட்டுக்களாகத் திகழ்ந்ததோடல்லாமல் எதிர்காலத்தில் வரப்போகும் சந்ததிகளும் ஆய்வாளர்களும் அவ் ஆலய புகழ் பெருமைகளை அறியவும் தெளியவும் உதவி செய்கின்றன.

இந்தத் ‘தல புராணம்’ என்ற இலக்கிய வடிவைச் சிறப்புறக் கையாண்டு, இந்த இலக்கிய மரபு பயன்பாட்டில் இல்லாது அழிந்து செல்லும் நிலைமையிலிருந்து அதனை மீட்டெடுத்து, இவ் வடிவிலேயே ஈழத்தின் வடபால் புகழ் பூத்த சைவ தமிழ் பாரம்பரியம் மிக்கதும் ஆதிக் குடிகள் வாழ்ந்ததுமான நாகர்கோயில் திருப்பதியில் குடிகொண்டுறையும் கண்ணகி அம்மன் ஆலயத்தின் அருமை பெருமைகளை ‘குடாநீரூரான்’ பாடி இருப்பது பெரும் சிறப்பிற்கும் பாராட்டுக்குரியதும் ஒரு பெருந் தெய்வ கைங்கரியம் என்பதனையும் கூறிக் கொள்கிறேன்.

ஆலய பூசகர் அன்பர் பத்மநாதன் கனவில் தன்வரலாறு பாடப்படவேண்டும் எனவும் சிலகுறிப்புகளைக் கூறி

இன்னார் பாடவேண்டும் என்று தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சில இடைவெளிகளைக் கடந்து அக்கட்டளையை ஏற்ற குடாநீரூரான் ஆலய வாசலில் அடியவர் முன்னிலையில் அம்மனின் ஆசீர்வாதத்துடன் காப்புச் செய்யுளைப் பாடி மூன்று நாட்களில் விருத்தம், கட்டளைக்கலித்துறை, சந்த வடிவங்களில் 355 பாடல்களைக் கொண்ட இத் தலபுராணத்தை பாடி நிறைவுசெய்தார் என்ற செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதுடன் இது போன்ற முன்நடந்த சம்பவங்கள் கட்டுக்கதைகள் எனச் சொல்லித்திரியும் சில அறிவிலிகளை தலைகுனியவும் வைக்கிறது.

ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு மிகத் தனித்துவமானது சிறப்பானது. மிக நெடுங் காலமாக பக்தி பூர்வமாக பின்பற்றப்பட்டு வரப்படுவது. இந்தியாவில் இருந்து கடல் வழியாக ஈழத்தின் வட கரைக்கு வந்த கண்ணகி வழிபாடு பின் நகர்ந்து ஈழத்தில் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் பரந்து ஒரு புதிய சமய கலாசாரமாக, வழிபாட்டு முறையாக மாற்றம் பெற்றிருக்கிறது. இவ் வழிபாடு தொடரும் எல்லா ஆலயங்களிலும் கண்ணகி அம்மன் கிழமூதாட்டி உருவில் உலவித்திரிந்த செவிவழிக்கதைகளை அறிய முடியும்.
இவ்வாறு கண்ணகி வழிபாடு பல பிரசித்திபெற்ற ஆலயங்களின் வரிசையில் நாகர் கோயில் கண்ணகி அம்மன் ஆலயமும் முக்கிமானது. அவ் ஆலயத்தின் தல வரலாறும் மகிமையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அறிவும், பாரம்பரியமாக வந்த சமய ஆறிவும், புவியியல் மற்றும் வரலாற்று அறிவும், கிராமிய வழிபாட்டு முறைமைகள் பற்றிய அனுபவ அறிவும், சந்ததி சந்ததியாக புராண இதிகாசங்களைத் தனித்தனிப் பாடல்களாக பாடி பொருள் சொல்லி வருகின்ற பெளராணிக மரபறிவும், என பல துறை அறிவுகளில் கைதேர்ந்த ‘குடாநீரூரான்’ சி. பசுபதி அவர்கள் இத்தல புராணத்தை ஆக்கி இருப்பது மிகப் பொருத்தமானது.

இலக்கண இலக்கிய ஆளுமை மிக்க இவரின் இந்நூல் இவ்விரண்டு துறைகளிலும் சிறந்து இடையறாத மரபின் தொடர்ச்சியை சுட்டி நிற்கிறது. இவ்வகையான இலக்கியங்கள் வழக்கொழிந்து விட்டன என்றும், இவற்றை கையாள்பவர்கள் அறவே இல்லை என்றும், இந்த மரபு தொடர்ச்சி இன்றைய இலக்கிய செல்நெறிக்கு தேவையற்றது என்றும், சொல்லிக்கொள்ளும் சிலருக்கு இந்நூல் சாட்டையடி கொடுத்திருக்கின்றது.

ஒரு தலபுராணத்திற்குரிய மரபு ரீதியான அமைப்பை ஒழுங்கை பாடுபொருட்களை அச்சொட்டாக பின்பற்றி, ஒவ்வொரு தலையங்கங்களிலும் நிகழ்ந்தேறிய சம்பவங்களை செவிவழிச் செய்திகளை செய்யுள்களூடாக விபரித்து, இலக்கண இலக்கிய நிபந்தனைகள் செழுமைகள் குறையாதவாறு பார்த்து, இந்நூலை குடாநீரூரான் ஆக்கி அருளி இருக்கின்றார்.

ஏட்டு வடிவில் அழியும் நிலையிலிருந்த கண்ணகி புராணத்தை மறுபிரசுரம் செய்து ஊருக்கு உவந்து அதன் பயன்களை வெவ்வேறு இடங்களுக்கு தேடிச் சென்று ஓதி அதன் சிறப்பையும் செழுமையையும் எடுத்தியம்பிய அனுபவமும் ஈழத்தில் இலங்கும் பல கண்ணகி ஆலயங்களுக்கு பெறுமதி மிக்க இக் கண்ணகி புராணப் பிரதிகளை இலவசமாக வழங்கி அவ்ஆலயங்களும் அதனை ஓதி பலன் பெற உதவிய தாற்பரியமும் இவருக்கு இந்நூலாக்கத்திற்குக் கைகொடுத்து உதவி உள்ளது.
இக் கண்ணகி புராணம் வடமராட்சி கிழக்குப்பகுகளில் ‘கோவலன் காதை’ எனவும் முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதிகளில் ‘சிலம்பு கூறல்’ எனவும் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ‘வழக்குரை’ எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

‘நாகர்கோவில் கண்ணகி அம்மன் மான்மியம்’ என்ற இத் தலபுராணம் காப்பு, அவையடக்கம், அமைவிடக் காதை, முன்காவியக் காதை,உற்பவ காதை, பூர்வீகக் காதை, வைபவக் காதை, தெய்வீகக் காதை, அற்புதக் காதை அர்ச்சனைக் காதை, வணங்கு காதை, வாழ்த்துக் காதை, என்ற சருக்கங்களுடன் அவற்றைத் தொடர்ந்து இறுதியாக நாகதம்பிரான், கண்ணகை அம்மன் துதியுடன் இத்தல புராணம் நிறைவடைகின்றது.

காப்புச் செய்யுளில்

“ஆதி சக்தியாகி அரிய சிவன் பாங்காகி
பாதி உருவாகி பதி நாகர் கோயிலிலே
நாதி எமைக்காக்க நண்ணியிடு கண்ணகையாம்
சோதி வடிவான சுந்தரியை தொழு தொழுவாம்’
என்று பணிந்து தன் தலபுராணத்தைத் தொடங்குகிறார்.

இந்த ஆலயத்திற்கு காரணரான முன்னொருகாலம் வாழ்ந்த நாகர்கோவில் நாகதம்பிரானின் பூசகரான சிதம்பரனார் ஒரு முன்னறியா மூதாட்டியை காண அவளோ

” வற்றாப்பளை செல்ல வந்தநான் களைப்படைந்து
சற்றிங்கு தங்கிச் செல்வதற்கு எண்ணமிட்டு
மற்று இங்கிருந்தேன் உன் மலர்ந்த முகந்தனைக் கண்டு
பற்றுமிகக் கொண்டெனென” சொன்னதிலிருந்து இந்த ஆலயம் தோன்றிய வரலாறு விரிகிறது.

இந்த கண்ணகி வழிபாட்டில் பேணப்பட்டு வரும் தனித்துவமான வழிபாட்டு முறை தன்னை

“பண்டங்கள் இறக்கி பின்னர் பத்திமையாளர் கூடி
இன்பொடு இருந்து தங்கள் இறைபணி யாவும் செய்ய
துன்பியல் பாடலான தூய நற்சிலம்பு கூறல்
அன்பினில் தொடர்ந்து பாடி அருளினைப் பெறுவராமே’
என்ற பாவில் காண முடிகிறது.

‘கண்ணழகு காட்டி எமைக் கனிந்து காக்க
கண்சாடை காட்டி எம்முள் கலந்த தாயை
விண்ணளவு புகழ்தந்து விளைந்த அன்பில் வித்தகனாய் ஏற்றி வைத்து வினைகள் போக்கி
மண்ணளவு உள்ளளவு மகிழ்ந்து காட்டி மாதவளாய் உளம் புகுந்து மதித்த பாடல்
உண்ணளவு உணதுவாய் உவந்து உண்ண உன் அருளை தலை வைத்தேன், உயர்த்துவாயே’ என்ற பாடல் இவரின் கவியாளுமையை காட்டி நிற்பதோடு பட்டினத்தடிகள், அபிராமிப்பட்டர் ஆகியோரின் பதிகங்களை மனச்செவிமுன் சொல்லிச் செல்கிறது.

‘கண்ணகை அருளால் அன்பால் கசிந்தெழு களிப்பின் மூழ்கி புண்ணிய வசத்தினாலே புகலும் இக்காதை தன்னை
மண்ணினில் உள்ளோர் பாடி மகிழ்ந்திடல் வேண்டுமென்று பொன்னடி பணிந்தேன் தாயே புகழ்தந்து போற்றுவாயே’ என்ற இவரது அவையடக்கச் செய்யுள்களிலொன்று இவரின் பக்தியையும் இவரின் இப் புராணம் பாடுதற்கான வேணவாவையும் படம் பிடித்துக் காட்டுகின்றன,

ஒரு நீண்ட தலபுராணத்தில் நான் சுட்டியவை சில பதச்சோறுகளே. விரிவஞ்சிச் சுருக்குகிறேன்.

சைவ சமய அபிமானிகள், மரபுத் தமிழார்வலர்கள், நாகர்கோவில் கண்ணகை அம்மனை தம் குல தெய்வமாக, தம் குடும்ப ஆச்சியாக கொண்டு வழிபட்டுய்வோர் இப்புராணத்தை எழுத்தெண்ணி படித்து பயன் கொள்ள வேண்டுமென வேண்டி இம்முயற்சிக்கு உறுதுணையாக

நிற்பவர்களையும் இறையாசியோடு இத் தல புராணத்தை எழிலும் பொருளும் குன்றாது யாத்தளித்த குடாநீரூரான் சி. பசுபதி ஐயா அவர்களையும் பாராட்டி வாழ்த்திப் பணிகிறேன்.

த.ஜெயசீலன்
பிரதேச செயலர்
பச்சிலைப்பள்ளி

05.04.2025.