நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள்.
எங்கெங்கும் சிதைவுகள்.
எங்கும் புகைமூட்டம்.
எங்கெங்கும் தீப்பரவல்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்…
பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள்.
மாறிமாறி எல்லைமீறி
விமானங்கள், ‘ட்ரோன்’ வகைகள்,
ஆழ்கடற் பெருங்கலங்கள்,
நீர்மூழ்கிகள், சரியாய்
ஏவுகிற பீச்சுகிற குண்டு,வேட்டால்
எரிமலைகள்
வெடித்திடுது குடிமனைக்குள்.
இந்தப் பேரிரைச்சலுக்குள்
இடைவிடாது போர்ச் ‘சைரன்’ அலறிடுது.
வானெங்கும்
தொடர்ந்து வரும் ‘குண்டொளிகள்’
கூற்றின் கைக் கொள்ளியாச்சு.
வெடியோசை மேளச் சமாக்களாக…
நடுநடுங்கி
உசிரைக் கரங்களிலே பிடித்துத் துடித்து முழுப்
பசியோ டலைந்திருக்கும்
பச்சைக் குழந்தைகளை…
“ஏனெதற்கு இந்த வெறியாட்டு”
என அறியா அப்
பாவிகளை…யாரோ சிலரின் ‘அதிகார
போதைக்காய்’; சேர்த்த பொருள் செல்வம் பறிகொடுத்து
வாழத் தவிப்போரை…
யாரெவர்கள் தாம் நினைத்தார்?
சொர்க்கா புரிகளைச்
சுடுகாட்டு மேடாக்கிக்
கறுவுவதை அன்றி
என்ன இலாபம் ‘இவர்’ கண்டார்?
ஓர்நொடியில் நகரை
நரகமென மாற்றுகிற
போரில் யார் எப்போ என்ன பலன்பெற்றார்?
சிதைவுகளுள்… சிதைந்த சோதரரை
மீட்டெடுக்கும்
எதுவும் அறியாதவரும் நாளை சிதைபடலாம்.
இடிந்த பெருநகரின்
இடிபாடுகளுள் யாரும்
கிடந்திடலாம்;
‘அவர்க்கெல்லாம்’
போர்க்கான காரணங்கள்
‘விடுகதைகள்’ அல்ல!
யாவையையும் கருவறுக்கும்
தொடர்கதைகள் ஆச்சே!
தொடர்ந்தும் போர் அரக்கன்
மடியாமல் திமிறி நின்றால்
மண்ணிலெது மிஞ்சிடுமே?
யார் அழிந்தால் என்ன?
யார் சிதைந்தால் என்ன?
பேர் புகழும் கொள்கைகளும் பெரிதென்று நிற்பவரால்
சூனியந்தான் தோன்றிடுதே!
சுதந்திரமும் மாய்ந்திடுதே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.