உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை;
நல்ல முயற்சிக்கு,
நல்ல சிந்தனைக்கு,
நல்லதனைச் செய்வதற்கு,
நல்லாரைக் கூடி நடப்பதற்கு,
நாட்டிலுள்ள
நல்ல விடயங்கள் தமை
மீள நாட்டுதற்கு,
இல்லையின்று காலம்!
இவ்வாறு எதுஞ்செய்தால்…
வயிறெரிந்து, பொறாமையுற்று,
வழிமொழிய விரும்பாது,
தயவுதாட் சண்யமற்றுத் தடைபோட்டு,
அதைப்பழித்து,
எள்ளி நகைப்பதுவும்;
“இவர் எப்படிச் செய்ய ஏலும்
கள்ளம் உள் இருக்கும்” எனக் கதைப்பதுவும்;
எதுஞ்செய்யா-
திருந்து…செய்பவரை இழிவுசெய்து;
அடக்கி ஓட்டத்
திரிவதுவும்; தான் இன்று திறமையென்று பலர் உள்ளார்!
தாங்களும் செய்யாது,
செய்வாரையும் விடாது, “பேர்
தேங்கியே நாறினாலும்
தீமையில்லை” எனத்தானே
ஊரில் பலர்திரிவார்!
ஒருவன் திறமையொடும்,
ஆளுமை ஆற்றல் அறிவோடும்,
துணிவோடும்,
புதுமையொடும், நற்சேவை
புவிக்குப் புரியவந்தால்…
அதை, அவனை அரவணைத்துப்
பயனபெற நினையாமல்;
அது தமது இருப்புக்கு ஆபத்து,
“அவனருகில்
இருந்தால் இடைஞ்சல் எமக்கு”, என
ஒதுக்கி…
அற்பர்கள் தங்களுக்கு “ஆமாமாம்” போட்டுத்தம்
சொற்கேட்கும் சோத்திகளைச்
சுற்றவர அமர்த்தி…தம்
குறைகளை மறைத்து,
கொஞ்சமும் திறமையற்று,
எதும் மாற்றஞ் செய்யாது,
ஏதோ… தம் காலமோட்டிக்
கதைவிடுவார்!
அவர் ஆளும் காலமிது…
இதனால்
ஊருக்குத்தான் நஷ்டம்;
உண்மைத் திறமைகளைப்
பாராட்டா விட்டாலும் பழிக்காது
நல்லவற்றைச்
செய்பவரைச் செய்யவிட்டால்
செழிக்குமடா வையம்;
உய்யும் வரலாறு;
உளம் இதற்கு மாற வேண்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.