காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது.
கால்களும் அதற் கேற்றவாறுதான்
பாலையோ அனற் பாதையோ…அதில்
பாய்ந்துமே பயணித்து உள்ளது.
கால்களில் அடி பட்டிருப்பினும்,
கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால்
கால்களில் பலம் அற்றிருக்கவும்,
கால்கள் ஓயலாம்; காலமோடுமாம்!

காலத்தோடு யாம் ஓடவேணுமே
கால்களை நிதம் காக்க வேணுமே
கால்களில் உரம் ஊட்ட வேணுமே
காலின் காயங்கள் மாற்ற வேணுமே
கால்களில் பழுதேற்படின்…உடன்
காவு வண்டியில், வாகனத்தினில்,
ஏறிக் காலத்தோ டோட வேணுமே!
இளைப்புக் களைப்பிலா தாட வேணுமே!

காலத்தின் வேகத்தோடு ஓடியும்
கலைத்து வென்றவர் யாருமில்லை காண்!
காலத்திற்கீடு தான் கொடுத்தவர்
கனக்கப் பேரில்லை; ஓர் சிலரே தான்!
காலத்தோ டோடிக் களைத்து ஓய்ந்தவர்..,
கடுமையாய் முயன்றே நலிந்தவர்..,
கோடிப்பேர்; அதனோடுமே சவால்
கொள்ளாதோடினால்…நாமும் வாழலாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.