இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும்
ஏனடா மனக் காழ்ப்புகள்?
ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள்
ஏன் பெருகுது தூற்றுதல்?
நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை
நீட்டிக் குற்றம் சுமத்தலேன்?
நேர்ந்த நன்மைகள் விட்டுமே குறை
நெடுகச் சொல்லிப் பழிப்பதேன்?

தாங்கள் ஏதுமே பண்ணி டாதவர்,
சாதனை பற்றி எண்ணிடார்,
தகுதியற்ற தற் குறிகள், அற்பர்கள்
செயற்கரியவை செய்திடார்,
தூங்கியே விழுந்து…ஏதுஞ் செய்வோரைத்
தூற்றியே பிழைக்கின்றனர்.
சொந்த வக்கிரம் ஏக்கம் தீர்க்கப்…பொய்
சொல்லியே மகிழ்கின்றனர்.

வளைந்து, தாம் குனிந்தே அடிமையாய்
வாய்ப்புத் தேடி நலிபவர்
மற்றவர் சுயமாய் நிமிந்திடில்…
வல்லமை கொண்டுயர்ந்திடில்…
உழைச்சலோடுளப் பொறாமையால் நிமிர்ந்
தொளிர்பவர் மேல் அபாண்டமாய்
உரைக்கிறார் பழி; உடன் இழிமொழி
உதிர்க்கிறார்; இதோ நேர்வழி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.