எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும்,
இடிகளே வீழும் கணமும்.
“எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே
எழும் ஒரு அசரீரியும்.
சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும்,
தவிர்த்து…மெய் தனை ஏய்பினும்
சாத்தியம் இது; யான் ‘ இவை’ எதுஞ் செய்யலை
சாராது துன்பம் எனவும்,
விதியினை நம்பியும், வினைகளை நம்பியும்,
மிகுபெரும் இறையின் துணையும்
விடாதெனக் காத்திடும்.
தலைக்கு வருவதை
வீழ்த்தும் தலைப் பாகையொடெனவும்,
மிகநம்பிச் செல்கிறேன்; நம்பிக்கை பொய்க்கலை
விடைபெறும் நெஞ்சின் சலனம்.
விளங்குவேன்… என்வழி தவறின் எல்லாம் மாறும்;
விலகாது எனது பயணம்!
காலமும், கோள்களில் மாற்றமும், நேரமும்,
கைகளைக் கட்டப் பார்க்கும்.
கர்ம வினை, பூர்வ ஜென்ம பலன், பாவக்
கசடுகள் நின்று தாக்கும்.
காலையில் யான் அறியாது செய் பிழை, புலன்
காமத் தவறு தீய்க்கும்.
கட்டவிழ்ந்த மனம், ஆசைகள் ஏக்கங்கள்,
கறுமங்கள் தனையும் சேர்க்கும்.
பாலென யான் இருக்கின்றேன் என நினைப்
பேன்; நீர் கலக்கலாகும்.
பாதையின் கல் முள்ளும் பயணத் தடைகளும்
பதறிடக் கூட வைக்கும்.
பயமின்றிச் செல்லுவேன் அறம், தர்மம், மெய், நியாயம்
பாறாத… உள்ளமொடு நான்.
பலிவாங்க வந்தவை பயந்தோடும்; வெல்லுவேன்
பலியாகேன்; காக்கும் இறை தான்!





