காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.

அடையாளம் எமதென்று எதைக்காட்ட வுள்ளோம்?
அயல், மேற்கின் அடையாளம் தனையா… நாம் கொள்வோம்?
அட எங்கள் திசையெங்கும் உள, யாம் கைக் கொண்ட,
அனைத்தும்… ஏன் இழிவென்று நமைத்தாழ்த்து கின்றோம்?

மரபாக வருகின்ற அடையாளம் நூறை,
வரலாற்றில் தொடர்ந்தின்றும் வரும் மண்ணின் மாண்பை,
வரமான இசை நாடகம் கூத்து பாவை,
மறந்தின்று நவீனத்துள் மறைத்தோமெம் வாழ்வை!

புதுமைகள் பிற ஊரில் பெறல்… தீது இல்லை.
புலம் தன்னின் பெருமைகள் பெறல்…தீட்டு இல்லை.
எது கொண்ட பொழுதும் நம் வழிவந்த சொல்லை
இலாதாக்கி… பிறர்வேசம் புனைந்தாற்தான் தொல்லை.

எமக்கென்று பெரும் பாரம் பரியங்கள் உண்டு.
எமக்கென்று தனித்தன்மைக் கலை மரபு உண்டு.
எமக்கென்று திறம் வாழ்க்கை முறையொன்று உண்டு.
இவைகாக்க முயன்றாலே நிலம் ஓங்கும் வென்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.