‘அமுத விழா’ வில் எமது ‘இலய ஞானி’

‘எண்பதாம்’ ஆண்டில்; எனக்கு ‘வயதுகள்-
ஏழு’ ஆன பொழுதில்; மிருதங்கம்
கண்டு கேட்டதன் இலயத்தை இரசித்துக்
கற்க ஏங்கினேன்! ‘நல்லை ஆதீனத்தில்’,
‘அண்ணா மலை இசைத்தமிழ் மன்றத்தில்’,
அன்றென் விரலை மடக்கித் “தா..தீ” முதற்
கொண்டு ஒவ்வொன்றாய்ப் பழக்கிய கோமகர்,
குரு, ‘சிதம்பர நாதரைப்’ போற்றுவேன்!

அந்தச் சின்ன வயதில் என் ஆர்வத்தை
அறிந்து நாத நுட்பங்களைப் பிஞ்சுஞ்
சிந்தையும், பத்து விரல்களும், தேர்ந்துமே
தெளிய வைத்தவர்… ‘சிதம்பர நாதனார்’!
மந்திரம் என அவர் சொல்லியே தர
வளர்ந்தேன்! ‘அட்சரப் புரட்டல்’, ‘தளாங்கு’,
சந்த ‘தகஜணு’ பயிற்சி, உடன் பல
தாள பேதங்கள் மனதில் பதிந்ததாம்!

அன்று வாரத்தின் இறுதித் தினங்களில்
‘ஆதீனம்’ ‘கலைக் கோட்டமாய்’ மாறிடும்.
ஒன்று ரெண்டல்ல ஒருநூறு மாணவர்
உணர்ந்து மிருதங்கம், வயலின், குழல், பாட்டு,
நன்று கற்றோம். இடைவேளை நேரத்தில்
நாங்கள் எத்தனை பம்பல், விளையாட்டில்
இன்பம் உற்றோம்? எல்லாம் பசுமையாய்
எண்ணத் திரையில் இன்றோடும்; மகிழ்கிறோம்

மிருதங்க ஆசான் ‘சிதம்பர நாதனார்’
மிருது வாயும், குழப்படிக் காரரை
உறுக்கியும், கற்கும் பாடத்திற் கேற்பவே
ஒவ்வொரு குழு வாகப் பழக்குவார்!
வரிசையாய் ஐந்தாறு மிருதங்கம்
வைத்து… “இனி நீங்கள் வாசியுங்கோ” என
நெறிப்படுத்துவார், தடக்கத் திருத்துவார்.
நிதானமாய்த் தாள உளியாற் செதுக்குவார்.

முதலாம், இரண்டாம் ஆண்டு மாணாக்கர்க்கு
மூத்த ‘கிருபா அண்ணர்’ ‘ஆனந்தராஜன்’
உதவிட…, ஒவ்வோர் குழுக்களும் பாடத்தை
ஊன்றிக் கற்கும்; கேள்வி ஞானம் உடன்
அதில் எமக்குக் கிடைக்கும்; ‘அறை’ சில
அருகிலே விழும்; ஆனால் அங்கானந்த
நதி புரளும்; அயலில் வயலினும்,
நற்குழல், சங்கீதமும், மேய்க்குமாம்!

இறுக்க மான கற்பித்தலின் இடை
“எடுங்கோ பழையாட்கள்” என்பார் சிலநேரம்.
பிறகு என்ன… பெரிய கச்சேரியே
பெருக்கெடுக்கும்; பிரமித்துப் போய் வாய்கள்
திறந்து பார்ப்போம்! விரல்களோ… ‘மிஸ்ரம்’
‘திஸ்ரம்’, ‘சதுஸ்ரம்’, ‘கண்டம்’, ‘சங்கீர்ணம்’ என
நிறையும் தாளங்களூடு இலயங்களை
நேரில் கற்கும்; அப் ‘பரிவு’ எமைத் தூண்டுமாம்!

‘பாலசிங்கம் சேர்’, ‘கணபதிப் பிள்ளை சேர்’,
‘பரமசாமி சேர்’ ‘வேலாயுத பிள்ளையார்,
‘ராதா அக்கா, ‘சித்தி விநாயகம் சேர்’
‘நமசிவாயர்’, ‘வீ.கே. நடராஜனார்’
‘பாக்யா மிஸ்’, ‘புஸ்ப்பரத்தினம் சேர்’,
‘வரவு’ பார்க்கும் ‘மயில்வாகனம் மாஸ்ரர்’,
ஆசான்களாய்க்… கலை வேள்வி நடத்தினர்
அன்று; அந்த நினைவுகள் நீறுமோ?

‘நல்லைச் சூழலில்’ எத்தனை நூறுபேர்
நாம்… மிருதங்கம் கற்றோம்? எண்ணிலார்
நல்லிசை பயின்றோம்! ‘அண்ணாமலை
மன்றம்’ வழங்கிய வாய்ப்பால் நம் தொல்கலை
எல்லை கண்டோம்; போர் இடர் சூழ்ந்தது
எனினும்… எங்கள் கலைகள் அன் றார்த்தது.
‘நல்லை ஆதீனத்தின்’ பின் ‘மங்கையர்க்கரசியில்’
‘சாதனாவில்’ நம் வகுப்பும் தொடர்ந்தது.

எனக்கு மூத்தோராய்க் கற்ற ‘கண்ணதாசர்’,
இனிய ‘வேல்மாறன்’, என்று ஒரு பெரும்
தனி ‘மிருதங்க வாரிசுக் கூட்டம்’ இத்
தரணி எங்கும் செழிக்க …அமுதூட்டி
தனித்துவம் மிகு ‘தண்ணுமை வேந்தனாய்’..,
தன்னிகர் அற்ற நம் ‘இலய ஞானியாய்’..,
தனது பெருமையைப் பேசாத ‘யோகியாய்’..,
தளைத் துயர்ந்தவர் ‘சிதம்பர நாதனார்’!

எத்தனை கச்சேரி, அரங்கேற்றம்?
எத்தனை இசைவிழா? பெரும் பாடகர்
அத்தனை பேர்க்கும் பக்க வாத்யம் தந்து
அசத்தி; பேர், புகழ், விருது, பட்டம், பல
பெற்ற போதிலும் கர்வம் கொள்ளாது; தன்
பின்னவர்க்கும் தன் ஞானத்தை ஊட்டியே
நிற்கும் எளிமைக் குதாரணம், சிந்தா
நிறைகுடம், அன்னான்… நீடூழி வாழணும்!

எனக்குள் ‘ஓசைப்பண்பூட்டிய’ ‘நந்தி”, என்
இளமையில் ‘சுதி சேர்த்த’ முதற் குரு.
எனை இசை மறந்தாலும்… ‘சந்தக்கவி’
இயல்பாய் எனுளூற வைத்த கலைஊற்று.
இனிய ‘அமுத விழா’ வினைக் காண்கிற
எமது ஆசான், ‘சிதம்பர நாதர்’…வென்-
றினியும் பல்லாண்டு வாழ்ந்து ‘இலயமழை’
இன்னும் பெய்திட… வாழ்த்தி மகிழ்கிறோம்!

‘ஈழ மண்ணதன் தண்ணுமை வாத்திய
இலக்கணம்’ என இன்றும் திகழ்கிற
வேளம், ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’, ஊர்
மேடை தோறும் முழங்கிய ‘நாதம்’, பே-
ராழம் கொண்ட ‘இலயக்கடல்’, எம் ‘இசைத்
தாளக் கட்டு’, தகுதியால் இன்றைக்கும்
ஆளும் அன்பு, ஈர்க்கும் பெரும்பண்பு-
ஐயன்; வாழிய… காணுக நூறாண்டு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.