நாமம் சாகாது

இந்த மண்ணிலெம் இறைமை சாகா
திருந்திடத் தட்டிக் கேட்டவர்.
இந்த இலட்சியம் வெல்ல, போர் வழி
ஏற்றும் அஞ்சா துழைத்தவர்.
பொங்கியே பின் அரசியற் களம்
புகுந்தும் தீயாய்க் கனன்றவர்.
பொருள் புகழ் தேடா துரிமை தேடியே
பொருதி ஈகம் புரிந்தவர்.

தனக்கு என்றெதும் சேர்த்திடாமலே
தமிழினத்தின் உயர்விற்கே,
தனித்த போர்க்குரலாய் ஒலித்துத்
தணிந்திடாதும் இயங்கியே,
நனவில் நோய் நொடி தனிமை கஷ்டங்கள்
நலிய வைக்கவும் சீறியே,
‘நடையில் நின்றுயர்’ ‘சிவாஜி லிங்கத்தார்’
நாமம் சாகாது; வாழுமே!

வல்வை மண்ணதன் வல்லமை தனை
வையகத்திற் குரைத்ததும்…
மன்றிலேறி முழங்கி, வீதியில்
மறியல் செய்து படுத்ததும்…
“இல்லை கேட்க ஆள்” என்றவர் முன்பு
“இருக்கிறேன்” என்று ஆர்த்ததும்…
இற்று நோயிலே வீழும் போதும் ‘மண்-
ணினை நினைத்ததும்’… போற்றுவோம்

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.