சொர்க்கம் சேர்வதெப்படி?

ஓடி ஓடி வாழ்வு நித்தம் உச்சம் காணப் போகுது.
ஓய்வு தேடிக் காலும் கையும் ஓரிடத்தை நாடுது.
மேடு பள்ளம் ஏறித் தாண்டிக் காயம் நூறு தோன்றுது.
மேனியின் உற்சாகம் சொட்டுச் சொட்டாய் வற்றிப் போகுது.

அந்த உச்சி எல்லை தன்னில் அற்புதம் ஒன்றுள்ளதோ?
அதையடைந்தும் கூட சாவு எம்மை விட்டு நீங்குமோ?
விந்தையான மூலிகைகள் ஏதும் அங்கிருக்குதோ?
விரைந்தடைந் தவற்றை உண்ணின் இளமை என்றும் நீளுமோ?

ஒன்றைத் தேடிக் கண்டு மற்றொன்றைத் தேடுதே மனம்.
ஒவ்வொன்றாகத் துய்த்தும் ஆசை தீரவில்லையே தினம்.
இன்னும் என்ன தேடி ஓடி ஏங்க உள்ளது உளம்?
இந்தத் தேடல் இறுதி மட்டும் தீர்ந்திடாததோ சொலும்?

ஓய்வு தேடும் மேனியிற் குற்சாகம் தாறதெப்படி?
உள்ளுறைந் தியக்கும் ஓர்ம சக்தி எங்கள் சொற்படி-
கேட்க வைப்பதெப்படி? எம் சோர்வு மாய்ப்ப தெப்படி?
கிட்டிடாத ஆசை தீர்த்துச் சொர்க்கம் சேர்வதெப்படி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.