கம்ப வாரதி

இமயம் தாண்டி உயர்க!

கம்பனினை வள்ளுவனைக் கடைந்து நித்தம்
கரும்பினது சாறாகப் பிழிந்தெ டுத்து
செம்புகளாம் நிகழ்வுகளால் மொண்டு..திக்கின்
திருவிழாவில் தாகசாந்தி வழங்கல் போல
கம்பவிழா எடுத்து : தமிழ்ச் சுவைஞர் எல்லாம்
களைப்பாறப் பருகவைத்து…உலக மெங்கும்
நம்புகழை ‘நாவலருக்’ கடுத்த தாக
நாட்டும் ‘கம்ப வாரதியார்க்’ கெனது வாழ்த்து!

தமிழ்நாட்டு அரசுதரும் உயர் விருதாம்
தகமை நிறை ‘கம்பர்’ விருததனை….ஈழத்
தமிழருள்ளே முதல்முறை இவ் ஆண்டு பெற்றெம்
தமிழ் மரபின் ஆழ, நீள, அகலம், தன்னை
தமிழகத்தில் நிரூபித்தீர்! நிமிர்ந்தீர்! நாளைத்
தலைமுறையும் பெருமைகொள்ளும் படி வளர்ந்தீர்!
எமதாற்றல் குறைந்ததல்ல எவர்க்கும் என்று
எழுதவைத்தீர்! இமயம் தாண்டி உயர்க நீவிர் !

த.ஜெயசீலன்