பாராளு மன்றைத் தெரிய
பழுதில்லாத்
தேர்தல் நடந்தது.
தேர்தலிலே போட்டியிட்டோர்
ஆர்வம் அளப்பெரிது.
‘இருநூற்றிருபத்தைந்து’
பேரைத் தெரிய
பிரயத்தனப் பட்டோர்…பல்
ஆயிரம்பேர்!
ஆனால் ‘வாக்காள ராக’
‘தாமாய் முன் வந்து’ தமைப்பதிவு செய்தோரில்
வாக்களிக்கார் ‘ஐம்பத்து மூன்று லட்சம் சொச்சம்’
பேராம்!
இது ‘மூன்றில் ஒருபங்காம்’!
‘செல்லாத
வாக்கு’ சுமார் ‘ஆறு அரை லட்சமாம்’…ஆக
‘அறுபது இலட்சம்’ பேர்
தம்வாக் குரிமையினைப்
புறக்கணித் துள்ளார்கள் இப் புதிய தேர்தலிலே!
ஜனநா யகத்தின் ‘பலன்’ இதுவா?
மலினமான
ஜனநா யகத்தில் எழுந்த வெறுப்பிதுவா?
ஜனநா யகத்தை பின்பற்றுவோர் தகுதி;
ஜனநா யகம் என்று…
சல்லிசல்லியாய் நொருங்கி,
தனித்தனியே ஓடி,
சமூகமென்றும் சேராது
முனகும் குரல்;
நூறு முரண்பாடு; இவை… இன்றை
ஜனநா யகத்தின்
மதிப்பைச் சிதைத்தனவா?
வாக்குச் சுதந்திரம்,
ஜனநா யக உரிமை,
யார்க்குமுள்ள கடமை,
அதைச்செய்யும் நேர்மை,
ஆட்சியில் பெரும்பான்மை அமர்தல்,
அதனை
ஏற்கா சிறுபான்மை நிலை,
தேர்தல் ஒழுங்கைக்
காக்கும் கடப்பாடு,
அதற்கான ஏற்பாடு,
நேரும் பொருட்செலவு,
கோரும் கண்காணிப்பு,
‘மார்க்கம் இதனைவிட வேறில்லை’
எனும்முடிபு,
யாவையையும்…. கேள்விக் குறியாக்கி
‘மூன்றிலொரு
வீதர்’ ‘தவிர்த்த’ விடயம் இது… சிறிதா?
‘அறுபது லட்சம் பேரும்’ அறிவற்றோர்,
ஏதும்
தெரியார், புரியார், எனச்சொல்லுதல் தகுமா?
‘அறுபது லட்சம்’ பேரில் அனேகர்
வாக்களித்திருந்தால்
பெறுபேறில் அது தாக்கம்
செலுத்தி இருக்காதா?
இவர்களின் முடிவைக் கணக்கில்
எடுக்காமல்
எவர் என்ன கொள்கை வகுத்தும் பயனுண்டா?
சேடம் இழுக்கும் ஜனநாயகம் தன்னை
ஈடேற்றா தென்செய்தும்
மக்களுக்கு நன்மையுண்டா?
ஜனநா யகம் வாழ வேண்டும்;
அதைநோக்கிச்
சனம்முழுதை ஈர்காத
தத்துவம் என் செய்யுமடா?