உயர்வுக்காய்த் துணையும் நல்கு

யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை
யாம் பெற்ற இரண்டாம் அன்னை!
வாழ்வில் யாம் உயர…லட்சம்
வரம் தந்த தெய்வ அன்னை!
நாளொரு பொழுதாய்.. நாம் அந்
நாயகி மடி தவழ்ந்து
கேள்வி ஞானத்தால் கற்ற
கீதைதான் ஒன்றா..? நூறு!

அவள் நிறைந்திருக்கும் இல்லம்
ஆலயம் தான் ;பார் போற்றும்
தவப் பெருஞ் சீலர், கற்றோர்,
காலடித் தடம் பட்டாங்கே
குவிந்தது ஞானச் செல்வம்!
குறைவின்றிக் கற்பித் தோர்கள்
கவிந்ததால் ….விரும்பிக் கற்ற
சேய்களால் …..கலக்கும் முற்றம்!

அன்னையின் நிழலில் நின்றோர்
அறிவொடு ஆற்றல் பொங்க
மன்னவர் ஆவார்; தம்தம்
துறைகளில்,வளர்ந்து ஓங்கி
எண்திசை தாண்டி ..விண்ணை
எட்டிநற் புகழும் கொள்வார்!
“அன்னையால் வாழ்ந்தோம்” என்று
அனுதினம் போற்றி நிற்பார்!

யாழ் இந்துக் கல்லூரீயில்
யாம் கற்கக் கிடைத்த பேறு
நாம்.. போன nஐன்மம் பத்தில்
செய்த புண்ணியத்தின் சாறு!
யாழ் இந்து அன்னை நாமம்
ஜகமுள்ள வரை மென்மேலும்
ஓங்க நீ உதவு:தாயின்
உயர்வுக்காய் துணையும் நல்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.