உன்னைக் காணல்

ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர்.
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர்,
அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.;
கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர்.
கண்மல்கி ஆறுகாலப்
பூசைகளில் காண்பர் சிலர்.
உண்டியலில் விழும் சில்லறையில் காண்பர் சிலர்
பூசும் விபூதி,சந்தனத்தில் குங்குமத்தில்,
பூமாலை கட்டியுன்மேல் போடுவதில் காண்பர் சிலர்.
தூர ஒலிக்கும் மணி ஓசையிலே காண்பர் சிலர்.
ஆரத்தித் தீப ஒளிச்சுடரில் காண்பர் சிலர்,
வார்த்தை “அரோகராவில்”
வடிவாகக் காண்பர் சிலர.;
தூபப் புகையிட்டுச், சுற்றிக் குடைபிடித்து,
ஊதிச்சங் கொலிக்கவைத்து,
சேமக் கலமடித்து,
நாதசுரம் தவிலின் இனிமையிலும் காண்பர் சிலர்,
வேதஒலி சங்கீத மெல்லிசையில் காண்பர் சிலர்,
பஐனைகள் பாடுவதில்,
உருக்கொண்டு ஆடுவதில்,
அடிஅளித்து பாற்செம்பு காவிப் பிரதட்டை
அடித்து விழுந்தெழும்பி
அழுவதிலும் காண்பர் சிலர்,
வெவ்வேறு விதமாய்ப் பிடிக்கும் விரதத்தில்,
எவ்வெவ் அபிN~கம் அருச்சனைகள் செய்வதனில்,
நேர்த்திவைத்து தங்கம், நினைத்த நகைவகைகள்,
கீர்த்திமிகு ‘வாகனங்கள்’
செய்து கொடுப்பதனில்,
காண்டா மணிவார்த்து வழங்குவதில்,
கோவிலிலே

“நான்செய்து தருகிறேன் ஓர்
கட்டடத்தை; இல்லை ஒரு
கோபுரத்தை அமைத்தே கொடுக்கின்றேன்” என்பதனில்,
காண்பர் சிலர்!
ஏழ்மை கலைத்தாலும்….. எளிமையுடன்
சாண்வயிறும் பசிகிடக்க தமக்கேதும் கேட்காது
ஊண்வேண்டும் உலகிற்கு எனநேரும் நேர்த்தியிலும்,
வீண்வார்த்தை பேசாத மௌனத்திலும்…..கேட்கும்
ஆன்மீகப் பேச்சினிலும்,
ஆண்டவனைக் காண்பர் சிலர்!
நானென் கவிதைகளில்…..,
நான் எதுவும் தாராது
மௌனமாய் கேணியடி முகப்பில்….,
நல்லை வீதிதனில்…,
கோபுரத்தின் உச்சியினில்….,
குளிர்ந்த ‘வில்வ மரத்தடியில்’…,
காண்கின்றேன் உன்னை;
நிதம்கதைத்து திரும்புகிறேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.