கடந்து போன கவிதை ஊழியன்
‘பால்வீதி’ வரையும் பயணித்த பாவலவன்.
‘சுட்டு விரலாலே’
சொர்க்கத்தை தொட்டுவந்தோன்.
‘நேயர் விருப்பத்தில்’
நிஜ நியாயம் பேசியவன்.
‘ஆலாபனை’ செய்து சாகித்தியப் பரிசு
தேடிவர வைத்த…’பித்தன்,’,
‘விலங்கில்லா கவிதைகள்,’
‘கண்ணீர் துளிகளுக்கு முகங்களில்லை,’
எனும்கவிதைத்
தொகுப்புகளால் தமிழணங்கின்
தோள்களுக்குப் புதுக்கவிதை
நகைபுனைந்து சூட்டியவன்.
நான்குவகைச் சீர்செய்தோன்!
‘ஹைக்கூக்கள்’ அன்று…வெறும்
கற்களெனத் தான்கிடக்க
வைரங்கள் என்றவற்றைப் பட்டைதீட்டிக் காட்டியவன்.
‘மின்னல்களாம்’ ‘கஜல்’பற்றி
‘மின்மினிகளாற் கடிதம்’
ஒன்றெழுதித் தமிழ் அதனைக்
காதலிக்க உணர்த்தியவன்.
ஆங்கிலம், உருது, அரபி, இந்தி ,சமஸ்கிருதம்,
பாரசீகம் பயின்று
அம்மொழிப் ‘பா’ வகைதெளிந்தோன்.
‘சர்ரியலிஸப்’ பார்வை
தமிழ்க்கவிதையில் பார்த்தோன்.
வேராகி பலவிழுது விஸ்வரூபம் பெறச் செய்தோன்.
அன்றே உலகக் கவிதையின்
பிழி சாற்றை
‘இன்றிரவு பகலிலென்றும்’
‘பூப்படைந்த சப்தமென்றும்’
பதினேழு கட்டுரைநூற் கோப்பைகளில்
வடித்து…பா
நதிமூலம் தேடியே நாம்பயிலத் தூண்டியவன்.
‘மரணம் முற்றுப் புள்ளியல்ல,’
‘முட்டை வாசிகள்,’
‘கரைகள் நதிகளாவ தில்லை,’
‘சொந்தச் சிறைகள்,’
‘அவளுக்கு நிலா என்று பெயர்,’
எனும் ‘தொடர்களூடு’
எவர்க்கும் இலக்கியத்தை
இனிக்கும் ‘நெல்லி’ ஆக்கியவன்.
கவிதையெனும் சொந்த மனைவிபோதும்;
கதை, நாவல்
எனும் ‘வைப்பாட்டி’மாரைப்
பார்க்க… வசதி இல்லையென்றோன்.
‘வாணியம் பாடியிலும்’ தமிழ்வளர்த்த பேராசான்.
‘வானம் பாடிகளில்’
முன்பறந்த வழிகாட்டி.
நபி….வழி நடந்தும் கம்பராம நாமத்தை
செபித்து…
‘ரகு –மானை’ தொடர்ந்தகதை சொல்லியவன்.
“வெகுமதிகள் வேண்டாம்
ரகுமானே போதும்” எனக்
‘கலைஞர் ‘ அழைக்கக் கட்சிக் கவிஞன்ஆனோன்.
சினிமாவின் பாட்டை அம்மியாக்கி
“சிற்பி ஏன்தான்
அதைக்கொத்த”? எனக்கேட்ட சிற்பி….
நம் கவிக்கோ!
பழைய கவியரங்கில்
புதுக்கவிதையை ஏற்றி
அழகுபார்த்த ஐயன்.
சிலேடைச் சிகரம் இவன்.
ஆழ்ந்த அறிவும், அதைக்கடந்து
தெளிந்துணர்ந்த
ஞானமும், பரந்த தத்துவ விசாரமுங்
கொண்டும்….
எளிமைக் குறியீடாய்
தமிழ்ச் சரிதம்
தன்னில் தனித்து நிற்கும்
தகமை மிகு கலைஞன்….
கவிக்கோ அப்துல் ரகுமான்!
ஆம் …என்பதாண்டாய்
புவியுறைந்து இன்றகன்றான்…..
புகழுலகில் இனியகலான்!