அதே தினம்

 

மீண்டும் அதேதினம்போல் பெருகிற்றுச் சனவெள்ளம்.
மீண்டும் அதேதினம்போல் எழுந்தது
அவலஓலம்.
மீண்டும் அதேதினம்போல் வெடித்தன கதறல்கள்.
மீண்டும் அதேதினம்போல்
விளைந்தன அடிபிடிகள்.
மீண்டும் அதேதினம்போல்
வெந்தது நம் கோபமனம்.
மீண்டும் அதேதினம்போல்
வறுத்தெடுத்தது வெய்யில்.
மீண்டும் அதேதினம்போல்
விசும்பிற்றுக் கடலினலை.
மீண்டும் அதேதினம்போல்
மிரண்டது துடித்த உயிர்.
மீண்டும் அதேதினம்போல்
துவண்டது இடிந்த உடல்.
மீண்டும் அதேதினம்போல்
விலைபோச்சு மெய் நேர்மை.
மீண்டும் அதேதினம்போல்
விழலாச்சுதே யதார்த்தம்.
மீண்டும் அதேதினம்போல்
மேவிற்று மௌனவலி.
மீண்டும் அதேதினம்போல்
மிகுந்தது எதிர் காலஅச்சம்!
மீண்டும் அதேதினம்போல்
மிஞ்சிற்று ஆற்றாமை.
மீண்டும் அதேதினம்போல்
விலகிற்று நம்பிக்கை.
மீண்டும் அதேதினம்போல்
நடப்பதெல்லாம் கண்டு வெம்பி
தான்துவண்டு கைபிசைந்து காத்திருக்குதே நீதி.
மீண்டும் அதேதினம்போல்
இறுதியில்
எமைக் கவிந்து
வீழ்த்திற்று உயிரேக்கம்!
விலகவில்லை உடற்தாகம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply