“வாழத்தான் பூமிவந்தோம்;
வதைசுமக்க அல்ல” என்று
போரை வெறுத்து
புதுமையுடன் அன்பினது
ஆழ இணைப்பில் அனைவருமே ஒற்றுமையை
ஆளத்தான் காத்திருந்தோம்!
“யாவருமே… வாழ்வினர்த்தம்
என்ன” என அறியும்;
“இயற்கை மறைத்துவைத்த
எண்ணற்ற அதிசயங்கள் இன்னும்
இருக்கு” எனக்
கண்டு உணரும்;
களிப்பு, மகிழ்வு, சுகம்,
இன்னுமென்ன உண்டோ…
எல்லாம் அனுபவிக்கும்;
ஆசை ஏக்கம் அவாவோடு…
ஆயிரமாய்ச்
சூழ்ந்து இடர் தடைகள் தோன்றி வறுத்தாலும்….
ஓர் நாள் விடிவு ஒளிபெற்று மின்னுமென்று
காத்துக் கிடக்கின்றோம்!
கடவுள் காப்பாரென்றும்;
‘ஆத்தையப்பா வான – இயற்கை விதி’
மீட்குமென்றும்;
எங்கள் உழைப்பும், எமதுறவும்,
எம் அறமும்,
எங்கள் இலட்சியமும்,
எங்கள் நம்பிக்கையதும்,
நிச்சயம் உயர்வொன்றை
”இறுதி’யின்முன் நீட்டிவிடும்
அச்சம் ஐயமில்லை ஆனந்தம் சூழுமென்றோம்!
ஆனால் சிலநீசர்…
ஆயிரம் வியாக்கியானம்,
ஏதேதோ கொள்கை, எதுவெதுவோ கோட்டாடு,
ஏதேதோ தத்துவங்கள், எதுவெதுவோ வாகடத்தைக்,
காரணமாய்க் காட்டி;
கண்சிவந்து கைமுறுக்கி;
சேர்த்துவைத்த ஆயுதங்கள் தீட்டி;
பலர் தடுக்க
போர்போர் எனமுழங்கி;
போதாக்குறைக்குப் போய்
வீணாகச் சீண்டி வேண்டியே கட்டுகிறார்!
“நாமும் குறைந்தவர்கள் இல்லை”
என நாண்டுநின்றார்!
தீயை பலர் தூண்டுகிறார்!
தீ எங்கள் எல்லையிலும்,
தீ எதிரில் உள்ள திசைகளிலும்,
தொடர்ந்து பற்றி
எல்லாத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கி மூழ்கிறது!
வல்லமைகள் அற்ற எங்களைப்போல்
அங்கெங்கும்
உள்ளோர் …உணர்வும், உடலும், உயிர்வகையும்,
முள்ளினிலே சேலையாக
முற்றாய்க் கிழிகிறது!