புயலிடை நின்ற மரங்கள்.

கண்களில் தெரிந்தது கனவதன் கோலம்.
கண்ணீரில் கரைந்தது நனவினில் யாவும்.
புண்களே மிகுந்தன பொன்னுடல் எங்கும்.
பூசவோ மருந்திலை வலிகளே மிஞ்சும்.
பண்களில் மகிழ்ச்சிகள் மலரலை இன்னும்.
பாட்டுகள் ‘திரிந்தன’ அந்நியம் மின்னும்.
விண்வரை ஒளிர்ந்தமே…மிளிர்ந்த நம் வாழ்வும்
மீளலை; இன்றைக்கும் தொடருதே தாழ்வும்!

போரெனும் புயலிடை மரமென நின்று;
பொலுபொலு வென இலை, கிளைகள் உதிர்ந்து;
வேர்பல அறுந்து பெயர்ந்து வதைந்து;
வித்துகள் சிதறின திசைகள் கடந்து!
பாரொடு விண்ணதும் பார்க்க… நலிந்து
பலியாகு தெங்களின் பண்பும் நொடிந்து.
“யாரொடு நோவது”? என்று நிமிர்ந்து
யாழிசை மீட்டுவோம் நாமாய் உயர்ந்து?

படர்பனித் துருவத்தில் எரிமலை வாயில்
பரவிய சில விதை விழுந்தன சாவில்.
கடற்கரை ஓரத்தில் கடைசியாய் அன்று
கருகின அனைத்தும் கவினுமே தீயில்.
அடித்த போர்ப்புயலும் அன்றழித்தது வீழ்த்தி.
அதுதந்த வலிசுமந்தெரியு துள்ளே தீ.
கடக்குது பொழுது எனும் பொதும் எதும் மீட்சி
கண்களில் தெரியலை…. கரையுமோ
சாட்சி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.