மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே…
மனது தொட்டு வருடியே
மலரென, வாடாத மல்லிகைப் பூவென,
மலரணும் காண்… கவிதையே!
நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை
நவிலணும் சுவை கூட்டியே!
நகரணும்…கேட்போரின் செவியூ டிதயத்தை
நணைக்கணும்; உணர்வூட்டியே!
தமிழிலே கவிதைதான் தலைமை இலக்கியம்
தழைத்த தாயிரம் ஆண்டுகள்.
தமிழின் பெருமையைத் தமிழின் செழுமையை
தரிசிக்கலாம் பாக்களில்.
தமிழின் கவிதைக்கு இலயமே அடிப்படை
தனித்துவம் பா ஓசையில்..,
சகலதும் பாடிற்று தமிழ்ப்பா வரலாறு!
தவிர்த்தோம் இந் நூற்றாண்டினில்!
எங்களின் வாழ்க்கையை, எங்கள் விழுமிய
இயல்பு, அடையாளங்களை,
எங்களின் மண்சார்ந்த பழக்க வழக்கங்கள்,
எங்கள் நடைமுறைகளை,
எங்களின் கொண்டாட்டம், திருவிழா; இழப்பில்
எம்மன நிலைமைகளை,
“ஏன்” என்றும்… இவை யாவும் சீழென்றும் மரபினை
இழித்தார்… புதுப்பாவினில்!
பழமையை, எங்களின் பாரம் பரியத்தை,
பலம் மிக்க மரபுரிமையை,
பயிலத் திறனற்று… பயிலும் தரமற்று…
பழிசொல்லி கையை விட்டு,
விழுமிய நெறிமுறை விற்று,தமிழ்க்கவி
வேரை அறுத்து மெறிந்து,
வெற்று வரிசெய்து ஏதோ எழுதுறார்
மேன்நிலைப் பாக்களென்று!
வசனங்கள் ஐந்தாறை வரிசையாய் வைத்ததால்,
வரியை முறித்தெழுதலால்,
வசைகளை, வாழ்க்கை விழுமியத்திற் கொவ்வா
வன்மங்களைப் பறைவதால்,
விசயம், பல் பரிமாணம், வீச்சு, நவீனமும்
மேல்நாட் ‘டிசம்’ தத்துவம்,
மேலென்று ஊருக்கு விளங்கா துரைத்தலால்
விசமாச்சு நம் கவிப்பால்!
எங்கள் மரபினில், எங்கள் கவிதையில்,
ஏற்றம் புதுமை கோர்த்து;
எட்டுத் திசையிலும் கற்ற உத்தி நுட்பம்,
‘இசம்’ தேவைக் கேற்ப சேர்த்து;
எங்களின் இன்றைய வாழ்வு, எதிர்காலம்
ஏற்றங்கள் மாற்றம் ஏற்று;
இதயம் செவியில் இதம்பூசும் தேன் தமிழ்
எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து!
புதிய சொல், புதிய சொல் முறை, புது நுட்பங்கள்,
புதுப்புதுப் பாடு பொருட்கள்,
புதுமை சேர் சிந்தனை, புதுப்புது அணிவகை
புதிய கற்பனை, உத்திகள்,
புது வீச்சு, எங்களின் மரபுக் கவிதையில்
பொலிந்தோங்கி நிற்க…எழுது!
புரிந்தூர் இரசிக்க வை; தமிழும் செழிக்க நெய்;
புரட்சி செய்… பாரு பழுது!