ஈரம் இருக்கட்டும்.

ஈரம் இருக்கட்டும் இதயத்தில்.
வற்றாத
ஈரம் இருக்கட்டும் எண்ணத்தில்.
காயாத
ஈரம் இருக்கட்டும் எழுத்தில்,
உன் இசை, பேச்சில்.
வீரம் இருந்தாலும், விவேகம் மிளிர்ந்தாலும்,
காரம் மிகுந்தாலும்,
காலம் காலமாய்த் தமிழர்
மானுடம் பேசியதால்…
மனிதம் வளர்த்ததனால்…
காதல் ,இரக்கம் ,கருணை ,அருள் ,அன்பு, ‘அக
வாழ்வினது சாரம்’ என்று வகுத்ததனால்…
வீழ்ந்த எதிரிக்கும் ‘ பேராண்மை’ செய்ததனால்…
ஊரில் பகைவர்க்கும் ‘ஊராண்மை’ புரிந்ததனால்…
கோப நெருப்புக் குமுறி
எரிகையிலும்
சாபம் இடாமல் சகல உயிர்களிலும்
பாசங்கள் காட்டப் பழகியதால்…
இயற்கையுடன்
நேசங்கள் காட்டி நிமிர்ந்ததனால்…
சோதரரே..,
ஈரம் இருக்கட்டும் இதயத்தில்.
வற்றாத
ஈரம் கசியட்டும் எண்ணத்தில்.
காயாத
ஈரம் சுரக்கட்டும் எழுத்தில்,
நும் இசை, பேச்சில்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.