சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை.
இடையில் இணைகையிலே எவரும்
தடுக்கவில்லை.
உடையோன் பின் வந்ததென்று
ஊர் முறையிட்டதில்லை.
நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை.
பாத யாத்திரையில் சேர்ந்து பணிந்திணைந்து,
யார்க்கும் கரைச்சலற்று,
யாரோடும் முரண்படாது,
ஊனுணவு விட்டு, சைவ உணவுண்டு,
தானாய் நடந்தது!
அவ் ஐந்தறிவு ஜீவனுக்கு
ஞானம் பிறந்ததென்று யானுரைக்க வில்லை; ஆனால்
‘ஏனையவை’ போலன்றி,
எஜமானின் பின்னாலே
போகின்ற தென்ற புகாரன்றி,
அடியவர்க
ளோடு இருந்து படுத்தெழுந்து
சோர்வற்று
நானூறு கிலோமீற்றர் நடக்கத் தயங்காதே
போயிற்று அது;
ஏதோ புனித உணர்வோடே
முன்னே நடந்ததது;
முன் பரீச்சயப் பாதை
கண்டதுபோல் போனதது.
வேறு அதன் இனத்தவைகள்
என்றும் வராதிருக்க இணைந்ததது.
சரித்திரத்தில்
இதுபோல் கதையிருக்கு!
‘ அலோகாவை’ வாழ்த்துவோரே…
இதிலேதோ சூட்சுமம் இருக்கென்று புலம்புகிறார்.
அதன் பயணந் தன்னைப் ‘பிறர்’ சிலர்
இழிவுசெய்தார்.
குறைசொல்லி எம்மிற்பலர் கூவுகிறார்.
அதைமதிப்போர்
பெருக… அதற்குப் பெருமைசேர்வதைப் பொறுக்கார்
உரைக்கின்றார் பொய்கள்!
எம் பரவணியில் வந்த….
சிறப்பாய் எதும் நடந்தால்,
யார் எதுவோ பெயரெடுத்தால்,
பிடிக்காமல்… அவற்றில் பிழைபிடித்து…
வசைபாடி…
கொடும்புரளி பேசி குழப்பும் குணம்…
‘அதனின்’
தனித்துவத்தை மறுக்கிறது!
தானும் ஏதோ உள்ளுணர்வில்
இணங்கி நடந்த’அதை’ ஏற்காது
ஆறறிவு
சீவன்கள் சில பொருமித் திட்டிடுது.
ஐந்தறிவுச்
சீவனுக்கு உள்ள குணம்
சிலநரர்க்குக் கிடையாது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.