நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த
இழப்பினுக் கெதைநாம் செய்வோம்?
கூற்றுவன் கொடுமைக் காரன்
குணநலம் கெண்டோன்… கண்டோம்.
நேற்றிந்த நேரம் நின்றோன்…
“இன்றில்லை” என்ற உண்மை
காற்றிலே கலக்க வைத்த
காலத்தைச் சபித்தே சோர்ந்தோம்.

எங்களின் கையில் ஏதும்
இல்லையா? விதி காலம் தான்
சங்காரம் செய்து வாழ்வைச்
சரிக்குதா? சமைக்கும் தானா?
எங்கு, யார்க்கு, என்ன, எப்போ?
என்றுமே எழுதி வைத்தார்
இங்கெமை ஆட்டு கின்றார்?
எம் அறிவாற்றல் பொய்யா?

ஓர் கணம், எதிர்பா ராத
ஓர் நொடி, எல்லாம் கூடி
ஓர் விபத்தாகி வாழ்வை
உதிர்த்தது; ஆங்கேதோ ஒன்று
சேராமற் போயி ருந்தால்
மயிரிழை தனிலே தேகம்
சீர் பெற்று எழுந்தி ருக்கும்.
சிதைப்பதா விதியின் தீர்ப்பும்?

“இப்படி நடந்த தேன்தான்?”
என்றெம துளங்கள் ஏங்க,
எப்படி யேனும் தப்ப
வேணுமென் றழுதோம் கூட,
எப்படிக் குணங்கள், கொள்கை,
இயல்பிருந் தாலும் “வேண்டாம்
இப்படி நிலைமை” யென்றோம்..
ஏற்கலை விதியும்… மீட்க!

சாதிக்க நினைத்த வர்க்கு,
‘சாத்தியம் அறிந்த’ வர்க்கு,
நீதிக்குப் பணிந்த வர்க்கு,
நியாயத்தை மதித்த வர்க்கு,
வேதனை, சாவைத் தந்த
விதியின் உள் நோக்கம் என்ன?
சா…தனைத் தடுக்கே லாதெம்
தத்துவம் தவிப்ப தென்ன?

எல்லோரும் வாழ…தீயர்
இப்போதும் ஆள…ஆற்றல்
வல்லோனைக் கவர்ந்து காலம்
வான்சேர்த்த கொடுமை கண்டோம்!
எல்லோரும் கையா லாகா-
திருக்கிறோம்; எம்மை மீறி
எல்லாமும் நடக்கக் …கூற்றை
எதிர்க்கேலா தமைதி காப்போம்!

காலமோ, விதியோ, தெய்வக்
கரங்களோ, இழுத்து ஆட்டும்
நூலினில் ஆடு கின்ற
நொடிந்தோரோ நாங்கள்? அந்த
நூல் இடை அறுந்தால்… ஆசை,
நோக்கங்கள் நிறைவு றாது
வீழ்வதோ வாழ்க்கை? இந்த
விடை தேர்ந்த தெவரின் யாக்கை?

கோடானு கோடி பேரில்
குறித்த ஓர் நபரைத் தேர்ந்து…
தேடி, அச் சரியாம் நேரம்,
செக்கனில் சாவைத் தந்து…
கூட வந்தோரைக் காக்கும்
கொடு விதி எழுதிச் செல்லும்
நாடகம் தொடரும்; யார்தாம்
நடிக்காமல் தப்பக் கூடும்?

அவரவர் புரிய வந்த…
அவரவர் கடமை தீர,
அவரவர் விடை பெற் றோடும்
அவலத்தை…நாங்கள் யாரும்
எவற்றையும் தடுக்க ஏலா
எதார்த்தத்தை…’வாழ்வர்த் தத்தை’
எவருமே உணரா மெய்யை…
இழப்பிலா உணர்ந்தோம் ஊழை?

என்னதான் பேசி என்ன?
எதை எதை எழுதி என்ன?
இன்னென்ன நடக்கும் என்று
இருந்தாலும்… நடத்தல் வேறு
என்றான யதார்த்த வாழ்வில்
எதுவும் நிச்சயங்கள் இல்லாத்
தன்மையை அறிந்தும்…ஆசைத்
தவிப்பினுள் அமிழ்வோம் மீண்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.