தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய்,
மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய்,
மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள்
வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய்,
ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும்
எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய்,
சாய்த்து வீழ்த்திடத் தந்திரம் செய்திடும்
சகுனிகள் சூழ்ந்ததாய் ஆச்சு வாழ்க்கையே!

பொய்கள் வேசங்கள் போட்டுத் திரிந்திடும்.
போலிகள் மெய்கள் போல முழங்கிடும்.
ஐயகோ விச ஜந்து, பிசாசுகள்
அதிகாரம் பெற்று நேர்மையைக் கொன்றிடும்.
நைய வைக்கும் நரிகள்; அமுதினில்
நஞ்சு பெய்திடும் நட்புகள்; நம்பிக்கை
கொய்திடும் அயல்; கூடி முதுகினில்
குத்தும் உறவுகள்; கொண்டதெம் சூழல்கள்!

வாழ வைப்பதைக் காட்டிலும் வீழ்த்தவே
வரம் வழங்குவ ரனேகர்! வல்லமை
தோளில், நெஞ்சினில் கொண்டு நடந்திடில்…
தூற்றித் தொலைக்கத் துடிப்பர் பலர்! பலம்
ஆள வந்தால் அடக்க முயலுவர்
அஞ்சி… ஆளுமை அற்ற சிலர்! இந்தப்
பாழுலகினில் தோன்றும் தடைகளைப்
பஸ்ப்ப மாக்கத் துணிவோரே வெல்லுவர்!

என்னதான் கொடும் அரக்கப் பலங்களே
இருப்பினும், இழி குணக்குடி சூழினும்,
வென்று தாம் வாழப் பிறரை ஒழித்திட
வீம்பாய் நிற்போர்கள்… சுற்றித் திரியவும்,
அன்பு, தர்மம், அறத்தினிலே பற்று;
அகத்தில்… இயற்கை இறையினில் நம்பிக்கை
கொண்டு; உண்மைக் குழைப்பவர் வெல்லுவார்!
குழப்பும்… தீயவர் மாய்வார்; அகல்வராம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.