உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள்
வகைவகையாய்ச்
சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்!
சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை!
ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ
உயிரற்ற
ஓர்சடலம்;
ஆமாம் உயிர்ப்பிலாத ஓர்சடம்;
ஆதலினால்
ஆயிரம் சோடனையும்
அர்த்தம் இழந்ததாச்சு!
வேறுவேறு நிறங்கள்,
விதவித அலங்காரம்,
வெறுமனே கடதாசிப் பூக்களாய்,
எழில் மணம் தேன்
பெறுமதியும் அற்றுப் பிசகிற்று!
உயிர்ப்பிலாத
எதையும் எப்படியும்
எந்நவீனப் பொருள்கொண்டும்
விதவிதமாய்ச் சோடித்தும்
அதன் எழில் விளங்காது!
உயிர்ப்புள்ள, ஜீவன் உணர்வுள்ள,
துடிதுடிக்கும்
உயிருள்ள, சாகா ஒளியுள்ள,
ஒன்றுக்கு…
சோடனைகள், நவீன தோரணங்கள்,
நகை அணிகள்,
மகுடம் கிரீடங்கள் அவசியம் இல்லை!
உயிர்த்
தகைமையை, அழகைத், தளிர்ப்பை,
ஒளிமினுக்கை,
அள்ளிக் கொடுக்கும் ‘அதை’
உலகம் என்றென்றும்
அள்ளி இரசிக்கும்
ஆயுளுக்கும் ஆதரிக்கும்!
இந்த உயிர்ப்பெந்தக் கலைகளுக்கும் தான்பொருத்தம்!
இந்த நிலை இன்றெம்
கவிதைகட்கும் காண்.. பொருந்தும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.