இந்த எழிலினை எங்குமே காண ஏலா-
திந்த அழகைவே றெவருமே
காட்ட ஏலாது.
இந்த வைபோகம் வேறெங்கும் கிடையாது.
இந்த ஆனந்தம் எல்லோர்க்கும் எட்டாது.
இந்தப் பெரும்பேறு ஏற்கார்க்குக் கிட்டாது.
இந்தச் சிறப்பை இச்செகத்தில்
யாரெவரும்
எந்தவொரு கொம்பனும் இனிச்செய்ய முடியாது.
முன்பிருந்தே முன்னோக்கிச் சிந்தித்து,
ஓடி ,யார்க்கும்
முன்நிற்கும் ‘முருகை’
வர்ணிக்க வார்த்தையேது?
இந்த ஜொலிப்பை,
இந்த மினுமினுப்பை,
இந்த ஒளிர்வை இரசிக்காத ஆளேது?
நன்று தீர்த்தமாடி
நகர்ந்த ‘பஞ்ச மூர்த்திகளும்’
பொன் மின்னும் வாகனத்தில் புகுந்து
கிழக்குவெய்யில்
கண்கூசி மங்கிக் கருக…
ஐந்து சூரியர்கள்
வந்ததென;
பகல்மீது தங்கத் தகடடித்து
மின்னவந்து, சூழல் மினுங்கவந்து,
சுற்றிவர
நின்றவரும் சொர்ணர்களாய்
நிமிரவந்து,
வெளிவீதி
பொன்னால் முலாம்பூசிப் பொலியவைத்துக்,
காலையிலே
வீதிசுற்றிப் போனார்கள்!
ஆம்…விடியற் சூரியனின்
பொன்னொளி சுவாமிகளில் பட்டு
அவர் வந்த
பொன் ஐந்து வாகனத்தில் பொருத…
தங்கமழை
மண்ணிருந்து பெய்ததிங்கு.
வானம் பொன்னானதின்று.
காணக்கண் கோடி வேணுமெனக் கேளேன்..அஃது
சாத்தியம் இ(ல்)லையறிவேன்.
‘சாமானியப் பிறப்பின்’
கண்பெற்ற பேறு இஃது;
இதை விட ஒருகவினை
என்கண்கள் காணல் இயலாது.
அப்படித்தான்
காண்பதெனில் அடுத்த ‘தீர்த்தமன்றே
நல்லூரில்’
காண முடியுமதை; வேறெங்கும்
இதை எனது
கண்காணல் நடவாது.
என்கண்கள் உச்சமாகக்
கண்ட கவினை என்
கண், மனமும் மறவாது!





