எம்மை எமக்குணர்த்தும் விழா.

சனசமுத்திரத் திடையில் தவழ்ந்துவந்தான்
தேரேறி
கனவான் என நல்லை ஆறுகமுகக் கந்தன்.
இந்த சன சமுத்திரத்தில்,
இந்த மக்கள் வெள்ளத்தில்,
சிந்தை இழந்து சிலிர்த்தபடி
தத்தளித்து
யானுமோர் துளியாய்,
யானுமொரு அலையாய்,
யானுமொரு நுரையாய், துகளாய் எனையுணர்ந்தேன்!
“யானோர் வெறும் அற்பன்;
இவ் ஆழி அலைகளின் முன்…
என் குரல் கேட்காது.
என் பேச் செடுபடாது.
என் முகம் தெரியாது.
என் ஆற்றல் செல்லாது.
என் பதவி உதவாது.
என் தீர்ப்பும் வெல்லாது.”
என்று எனக்குள்ளே கேட்டதொரு அசரீரி!
அந்த நொடிஎன் அகத்தினிலே
சம்மட்டி
அடியொன்று வீழ்ந்தென் ஆணவம் மமதையதும்
பொடிப்பொடியாய்ப் போச்சு!
பொருளற்றக் கூட்டத்தில்
அலைந்ததுவும்;
அங்கென் அருமை, விலாசங்கள்,
தொலைந்ததுவும்;
நானங்கே இல்லாத போதுமெச்
சலனமும் தோன்றாது என்பதுவும்;
இக்கடலில்
நான் ஏதும் செய்தல் நடவாது எனும்முடிவும்;
தோன்றிற்றென் உள்ளே!
என்நிலமை மட்டுமல்ல
கூடியோரின் நிலையுமிதே…
யார் எவராய் இருந்தாலும்
யாபேரின் உணர்வுமிதே… எனுமுண்மை புரிந்தது… இவ்
மாபெருஞ் சனக்கடலை மண்ணில்
சிலநொடியில்
தோன்றவைத்துத் தனது சுயரூபம்,
பிரமாண்டம்,
ஈர்க்கின்ற ஆற்றல், எல்லாத்தையும் ஆண்டில்
ஓர் தேர் நாள்… உலகுக் குணர்த்தும்
மிகவலிய
ஆற்றல், பெருஞ் சக்தி,
‘அலங்காரக் கந்தனெனும்’
குறியீடாய் நல்லூரில் குடியிருக்கும்!
இதைப்போல
அரிய உதாரணங்கள்
அகிலமெங்கும் தானிருக்கும்!
“நாங்கள் வெறும் துளிகள்.
நாம் நீர்மேற் குமிழிகள்.
நாங்கள் அலை நுரைகள்.
நம் மமதை, ஆணவங்கள்
யாவும் சொற்பம்” என்று
இடைக்கிடை உணர்த்துவன…
இத்தகைய விழாக்கள்!
இதைத் ‘தன் முனைப்போடு’
சுத்துகையில் அடிக்கடி நினைக்கவேணுமே நாங்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.