தொழுதோம் உன்னை நம்பியே!

எங்கள் குறை கண்ணில் படவில்லையா? – அட
எங்கள் குரல் காதில் விழவில்லையா
எங்கள் வேண்டுதலுக்குப் பதிலில்லையா? –ஐயா
எங்கள் இடர் கண்டுமின்னும் மெளனமா?

விடியு முன்பு வீதிசுற்றி உருள்கிறோம் – “கந்தா
வேலா” என்று கூவிக்கூவி அழைக்கிறோம்.
படுத்த உன்முன் ‘பள்ளி எழுச்சி’ பாடுவோம் – நீயும்
பாய்ந்தெழுந்து உதவவேணும் வேண்டுவோம்

பன்னிரெண்டு கண்கள், காது கொண்டவா -எம்மைப்
பார்த்திடாது என்ன செய்கிறாயடா?
என்ன என்ன நேர்த்தி வைத்தோம் ஏற்றியா? – அதற்
கிரங்கிக் கேட்கும் வரங்கள் நல்க மாட்டியா?

பகலில் உள்ளே வீதி சுற்றப் போகையில் – பின்னால்
பஜனையிலே நின் புகழைப் பாடியோர்…
தகதகென்று மாலை வெளியே சுற்றையில் – “அள்ளித்
தருக அருளை” என்று ஏங்கிக் கேட்கிறார்

இலட்ச இலட்சம் பேர்கள் வந்து போகையில் – அவர்
எல்லோர்களுக்கும் சமமாய் நீதி நாட்டுதல்
இலகு அல்ல; உணர்கிறோம்… என்றாலுமே- வழிவே
றெதுவுமற்று தொழுதோம் உன்னை நம்பியே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.