நிழலாய்த் தொடரு!

யாரா யினிலும் அவர் அண் டிவர
சாதா ரணமாய்த் தழுவும் தலைவா!
வேரா கஎமக் குதவும் அரனே
வேலா பெருநல் லைகுகா சரணம்!

“தா தா” எனவும் அழுவேன் உதவாய்.
நானாய் வினவாப் பலதும் தருவாய்.
ஏதும் அறியான் எனையும் கவியாய்
எல்லோ ருமே ஏற்றிட வைத் தவனே.

உன்வா சலிலே உலவும் பொழுதெம்
உள்ளத் துயர்கள் உடன் வீழ்ந் திடுதே!
உன்பேர் உரைத்தே உருகும் கணமெம்
உள்… நிம் மதிவந் துறவா டிடுதே!

திருநாள் களிலே செறியும் அடியார்
சிலையா கிடவே எழிலால் கவர்வாய்.
வரங்கேட் பவரை எடைபோட் டருள்வாய்.
மனம் மெய் மொழியின் வலிகள் சுடுவாய்.

அழகா டிடு ‘தேர்’ அதில் ஆ றுமுகா
அனலாய் வருவாய்; அவலம் தனில் தீ
பொழிவாய்;
மறுநாள் குளிர்த் ‘தீர்த் தமதில்’
புனலா டியே தீ வினை நூர்த் தருள்வாய்!

‘பூங்கா வன’ மன் றிரு தா லிகளை
ஏங்கும் மட மா தருக்கே புனைவோய்.
நீங்கா தலையும் எமையும் தழுவு!
“நீ கா தலி” எம் நிழலாய்த் தொடரு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.