அருள் …கார்த்திகையில்

எதுதான் முடிவு எனவும் தெரியோம்.
எதுதான் விடிவு எனவும் தெளியோம்.
விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம்.
வினைஎன் னபழி தருமோ அறியோம்.

எனினும் திமிராய் எமையும் வியந்தே
எதுவும் தெரியும் எனவும் நடந்தே
கனவில் அலைவோம் நனவில் நலிந்தே
கதியற் றுயிரும் அலைவோம் மெலிந்தே

நானென் றிடும்ஆ ணவமும் பணிய
நாம் ஏ துமிலாச் சடமென் றுணர
ஈனம் இழிவு முழுதும் அழிய
ஏவு வடிவே லதையாம் நிமிர.

வெறு(ம்)மா யையினால் விரிஏக் கமதும்,
வினையின் விளைவால் மிகுதாக் கமதும்,
எரி…பன் னிருகண் சுடரின் ஒளியால்.
எமைத்தங் கமெனப் புடம்போட் டிடுவாய்.

திரளும் அவுணர் திறணைப் பொடிசெய்.
தெருவில் அசடர் திரிவர் தடு பொய்.
வரங்கேட் டுஅழும் வலுவற் றவர்கள்
மலர…வலியோர் தொலைய வரம்…பெய்.

எழில்’நல் லையிலே’ இருதே வியரோ-
டெழும் வேலினிலே உறைவே லவனே!
அழகே, அறிவே, அறமே, அடியாரக்
கருள்; ‘கார்த் திகையில்’ அவலம் அறவே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.