யானொரு கருவி நீயே தான் சுருதி
யாதையும் பார்த்துக்கொள் நீயே!
யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை,
என்வெற்றி தோல்வி, நோய் சுகமும்,
யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே!
எனை இயக்கும் சக்தி நீயே!
யாவிற்கும் காரணம், பொருள் நீயென்றுணர்வேன்
யான்; எனைக் காத்தருள் வாயே!
அதையிதைத் தாவென் றடிக்கடி கேளேன்
அன்று முதற்கொண்டு நானும்
ஆசையாய்க் கேட்ட தருளிய தி(ல்)லை நீ…
அதற்காய்… யான் கேளாத போதும்
பதவியும், பரிசும், தந்தே வளர்த்தாய்
பார்போற்ற நல்கினாய் பவிசும்.
பணிந்தேன்; எனக்கேதும் வேண்டுதல் இல்லை
பார்த்தருள்வாய் தேவை… நாளும்.
ஒவ்வொரு ஆண்டு உருண்டோடும் போதும்
ஒவ்வொரு வேண்டுத லோடு
ஓடுதெம் வாழ்வு; புதுப்புதுக் கனவு
உதிக்குது; ஏங்குது நனவு.
எவ்வித ஆசைதான் தீரினும் மழைபோல்
எழும்புது ஏக்கத்தின் பொழிவு.
எனினும் தெரிந்தே அவ்வப்போ தருள்வாய்
எங்களுக்கு ஏற்ற வரவு.
எத்தனை பேர்தான் வந்துமே போனார்
இருக்கிறாய் நீ அதே திசையில்
எத்தனை கூத்தைக் கண்டனை; இன்றும்
எழுந்தருள்வாய் நிஜ அழகில்
யுத்தமும் நோயும் தடைகளும் தோற்று
உதிர்ந்தன; உந்தனின் கழலில்
ஒளிர்கிறாய் நல்லையூர் வேலவா… நாம்வந்
தொதுங்குவோம் உன்னடி நிழலில்.





