தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து
எப்போதும் புன்னகை பூத்து,
எவரெவர் வந்து இருந்து எழுந்து
இழகி அழும்போதும் பார்த்து,
தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து,
தோல்விப் பயம் ஓட ஆர்த்து,
சொல்லுவாய் ஞானம் திருவிழா நாளில்;
தூயனே வையகம் காத்து.

நித்தியம் கோடி நிஜ எழில் சூடி
நெருங்கி வருபவன் நீயே!
நெஞ்சினை நீவி, நினைவை வருடி,
நிம்மதி நல்கும் நீ தாயே!
சித்தர்கள் என்றும் சேவிக்கும் கோவே
தீர்ப்பவன் நீ…உயிர் நோயே!
தீர்…வினை; நித்தம் தீர்வினைத் தந்து
தேற்றி அருள் புரிவாயே!

நல்லையின் வேலை நம்பிய யாரும்
நாதிகெட் டோய்ந்தது இல்லை.
நாடியே வந்தோர் நாளும் வரங்கள்,
நன்மை, பெறாததும் இல்லை.
வல்லதோர் சக்தி மலர்ந்திடும் வாசல்
வாழ்வைத் தடுத்ததும் இல்லை.
வஞ்சகர், சூரர், யாரும் அயலில்
வாழ்ந்து சிறந்ததும் இல்லை.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.