துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில்
களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ?
உடலா றிடுமோ? உயிரா றிடுமோ?
உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை!

அழகா… அழியா அருளா ளனுமாய்
அணுகும் பொழுதில் அபயம் தருவோய்.
ஒளியாய் உயிரை ஒளிர்விப் பவனே
உணர்வை நெறிசெய் திடுவாய்…துணைநில்!

எழிலின் தொடுவான் எனவே தெரிவாய்.
இசையின் சுரமாய் பெருகி விரிவாய்.
உழலும் அடியார் உளசஞ் சலமும்
உடனே தொலைய உதவி புரி… வா!

நிதமும் எவரும் நினையா வடிவில்
நிமிரும் நிழலே! நிலம் ஈர் ப்பவனே!
விதியின் சதியை தடுத்தா ளுபவா
விறல்வே லெறிஎம் வினைகொய் திடடா!

உருகி, உனதே எழிலைப் பருகி,
உரையும் குழறி, உணர்வும் இழகி,
வரங்கேட் டழுவோம்; தொடுவாய் வருடி.
மனதில் கணமும் பொழிவாய் அமைதி.

திரு’நல் லை’யதன் திருநாள் களிலே
தெருவில் வரும்செந் தணல்வேல் முருகா!
இருமா தரொடும் இளந்தென் றலென
எழு.. எம் அயலைக் குளிர்வி…இடர் தீர்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.