அழகும் அறிவும் அறமும் மறமும்
அருளும் நிறையும் அலங்காரா.
அவுணர் அழிய அமரர் நிமிர
அதிகம் உதவும் பெருமானே.
விழியில் கருணை வழிய, இதழில்
மிருது வசனம் பொழிவோனே.
வினைகள் அழிய, விதியும் பணிய,
விரைவில் உதவ வரவேணும்.
மொழியின் இனிமை தமிழின் கவிதை
முகிழும் படியெம் மனதேறி
முதலில் இருந்து முழுதும் உணர்ந்து
மொழிய அருள்’நல் லையின்’வாசா.
அளவு அறிந்து அறிவும் திருவும்
அருகில் அமர்ந்து அருள் ராசா.
அமைதி யுடன்நிம் மதியும் பொலிய
அனைவ ரினையும் அணை… வேலா!
கடின விடயம் எளிதில் நிறைய
கருணை யுடனும் கரந்தந்து,
கணித மென எம் கருமப் பலனைக்
கணி; நம் நிலமை தனைக்கண்டு.
தொடரும் துயரைத் துடை; நின் விறலின்
துணையில் ஜெயமும் பெறவைத்து…
துணிவு மனதில் தொடவும், உடலில்
சுகமும் கணமும் மிகச்செய்து….
தடைகள் உடைய வழிகள் தெரிய
தகுதி வளரத் திறமீந்து
தனமும் பெருக, மனமும் கனிய,
தருமம் செயவை உடன்வந்து!
கொடுமை சுடு, உன் குரலைக் கொடு, நம்
குறைகள் களைய உதவின்று!
குலவு நிதமெம் குனிவு நிமிர
கொடியை அசைமுன் னிலேநின்று!





