வேலனுக்கார் ஈடு?

நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது
ஞான நிழல் நல்கும் எழிற் காடு.
வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன்
வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு?

பக்திப் பரவசம் பெருகிப் பொங்கி – எங்கும்
பாயும்; வேலின் அருள் சுரக்கும் தங்கி.
முக்தி தேடுவோரும் வந்து முங்கி – தேவ
மோட்சம் காட்டும் பதியைப் பற்றடங்கி.

ஞானவேல் ‘மூலஸ்த்தானத்தில்’ இருக்க- தெய்வ
ஞானியர் சமாதி அதிர்வூட்ட.
ஆறுமுகர் சக்தி வழிந்தோட – காவல்
வைரவர் கை காக்கும்… பயமோட்ட!

வேலனே வேலாகி நிற்கும் கோவில் -சுற்றி
வீதி உலாவும் முருகன் நீழல்.
காலனைத் துரத்தும் ‘கொடிச் சேவல்’ – மயில்
கர்மவினைப் பாம்பைக்கொல்லும் நேரில்!

வள்ளி தெய்வ யானையுடன் வந்து – கந்தன்
வாழ்வருள… ‘நல்லை விழா’ கண்டு,
கொள்ளு வரம்; நிம்மதியும் தந்து – குகன்
கொஞ்சுவான்; வேறார் கதி தான் இங்கு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.