நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம்
அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே!
குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -நல்ல
குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே!

என்றும் அழியா அழகு கொண்ட வேலவன் -இன்று
என்ன புதுமை உள்ளதோ கொண்டாடும் நாயகன்.
நின்று ஒளியூட்டும் ‘அலங்கார ஆண்டவன்’- நீதி
நியாயம் சொல்லி எம்குலத்தை ஆளும் மன்னவன்.

“எங்கள் பலம், எங்கள் திமிர், எம் மகத்துவம் – அட
எங்கள் கலை, எங்கள் நிமிர்வென்றும் ஆண்டிடும்
சங்கையுடன்” என்பதற்குச் சான்று ஆனவன் – நல்ல
தலைமையற்ற குடிக்கு ‘வாழ்நாள்த் தலைவனானவன்’.

“இவர்கள் நாதியற்றவர்கள்” என்ற எள்ளலை – இங்கு
இவர்கள் ஞானம், செல்வம், வீரம், அற்றோர் என்பதை
எவரும் சொல்ல விடாது.. அவர் வியக்க வைப்பவன் – எங்கள்
இறைமையைத் தன் மகிமையினால் என்றும் காப்பவன்.

எங்கள் அரசனென்று வீதி சுற்றும் கம்பீரம் -நிதம்
எங்களின் இறைவனெனப் பற்றும் தெய்வீகம்
எங்கள் காப்பரண் எனவும் நிற்கும் ஆதாரம் – நல்லை
இருக்குமட்டும் தமிழ்த்தலைக்கு இல்லை சேதாரம்!

எம்பெருமை பாரம்பரியம் வாழ்த்தும் ஒருவிழா! – தமிழ்
இனத்தின், சைவ சமய மகிமை, ஏற்றும் பெருவிழா!
எம் தனித்துவங்கள் போற்றும் கந்தன் கலைவிழா – என்றும்
எம் விழுமியங்கள் காக்கும் நல்லூர்த் திருவிழா!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.