நல்லூரானை நாடி.

எங்கிருந்து இங்கு சனம் வந்து சேர்ந்தது? – அட
எள்ளுவிழ இடமிலாது எவ்வாறு சூழ்ந்தது?
எங்கிருந்து எந்தக் காந்தம் ஈர்த்திழுக்குது? – பக்தர்
இதயம் நல்லை அறுமுகனைத் தேடித் திரழுது!

யாரும் சேர்த்திடாது வந்திணைந்த கூட்டமாம் – ஏதும்
யாசகங்கள் வாங்கி சேர்ந்திடாதிந் நாட்டமாம்.
பேர் புகழிற்காக ஏங்கிடாத தேட்டமாம்- நல்லை
பெரியவன் தேரேறக் கண்டால்… ஆட்டம் பாட்டமாம்.

உடல் முழுக்க அலகு குத்தி வலி பொறுத்துமே -பறவை,
தூக்குக் காவடிகள், வந்து வியக்க வைக்குமே
அட இவரின் அன்பிற் கீடேதுமில்லையே – நல்லை
அரனின் வெறியர் அவனைவிட்ட கன்றதில்லையே!

தீயும் எரியும் கொடிய வெய்யில் எங்கும் தீய்க்கையில் – நேர்த்தி
தீர்த்துருண்டு காவடிகள் ஆடுவோர்களின்
காயம் அறி மாறும்…கந்தன் கருணைப் பார்வையில் – காலன்
கயிறுகூட அறுந்து போகும் வேலின் கூர்மையில்!

வந்த பக்தர் உளப்பசியைக் முருகன் போக்குவான் – அவர்
வயிற்றுப் பசியை அன்னதான மிடுவோர் ஆற்றுவார்.
நொந்தவர்கள் வந்து நெஞ்சமுருகி நேருவார் -அவர்
நோ வலியைத் துன்பத்தை ‘நல்லூரான்’ ஓட்டுவான்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.