வேலன் விழா.

“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…

யாரெவர்தான் எதையும் செய்யட்டும்;
அவர்கள் எங்கும்
வாண வேடிக்கை விடட்டும்;
அவர் ஏற்றும்
கூடிய ஒளிவிளக்கூர்
கண்ணை உறுத்தட்டும்;
சாமி எழுந்தருளச் சத்தமாய்
சினிமாவின்
பாடல்கள் நாத சுரந்தவிலில் முழங்கட்டும்;
ஆடட்டும் ‘அந்நிய மயில்கள்’ கவர்ச்சியுடை
பூண்ட படி;
மேடையிலே ‘சூப்பர் சிங்கர்’ பொழியட்டும்;
வேர்கள் அதிர ‘DJ’ விளைக்கட்டும் பக்திகீதம்.
காதைக் கிழிக்கட்டும் ‘செண்டைமேளம்’;
வெடி முழக்கம்
ஊரை உலுக்கட்டும்;
உறவுகள் ஒன்றுகூடிக்
கோடிகளைக் கொட்டி கொண்டாடும் தின விழாவில்
பேசட்டும் உபய காரரின் பெருமைகளை.
சாமிக்குச் சாத்திய
‘மாம்பழ ஏலத்தால்’
கோவில் களில்பல லட்சங்கள் குவியட்டும்.
‘வேள்வி’ எனும்பழைய
மிருக பலியிடலால்
ஆலய அயலெல்லாம் இரத்தமாறாய்ப் பாயட்டும்.
“காவலர் நாம்” எனும்முகநூல்
‘கருத்து மறவர்கள்’
பாவ உயிர்வதையை,
பரவுகிற புதுபுதுக்
கூத்துகளை, நடக்கும் கொடுமை சிறுமைகளை,
சீத்துவக் கேடுகளை
பார்த்தூமை ஆகட்டும்.
யாரெவரும் கூடி எதையும் இரசிக்கட்டும்.
யாரெதையும் எப்படியும் செய்யட்டும்;
திருவிழாவின்
யாவாரச் சந்தைகளில் யாரும் பிழைக்கட்டும்.
“நானென் நெறிபிசகா நடைமுறையில் விழாவெடுப்பேன்
காண்” என்று நல்லைக் கந்தன் பெருவிழா
ஆண்டாண்டாய் வந்து அமைகிறது!

அலங்காரச்
சோடனைகள் விதவிதமாய் மனதைத்
தொடும்வகையில்,
நாளும் ஒரு பொலிவில்,
நகைகள் புதுவடிவில்,
நாதசுரம் தவிலும்
நல்ல மரபிசையில்,
நாளுமொரு ‘பாரம் பரியம்’ உள் வீதியினில்,
தேவாரம், முருகநாம பஜனை, நாதஸ்வரத்
திருப்புகழ், தாள வாத்யம்,
வளை குழலோசை,
நந்தனார் தரிசனம், பூத நடனம், நாத
பஞ்சரத்னம், வேத பாராயணம், மிருதங்க
இலயம், திருப்புகள், மணியோசை, வகைவகை
மலராலே அர்ச்சனை,
புல்லாங்குழல், பரதச்
சமர்ப்பணம், பட்டிப் பொங்கல்,
இவற்றோடு
தமிழிற்கும் சம உரிமை…
தமிழிசைக்கு முன்னுரிமை…
அமிழ்தான ‘கந்தர் அநுபூதி’ அதைத்தொடர்ந்து
‘திருவாசகம்’ ஓதிப் பொருளுரைத்தல்,
அதால் பரவும்
பெரும்புனிதம்
மாரியாய்ப் பெய்து மண்ணைக் குளிர்த்திடையில்…
மண்டபப் படிகளிலே ‘அடியாரின் ஆலாத்தி’,
பொன்னாய் இளையோரை புடம்போடும் பஜனைநெறி,
சிறுவர்க்கும் விழாவாய் ‘பாலஸ்க்கந்தர்’ ‘தங்க
இரதமேறச்’ சிறாரும் ஆன்மீகம் பயிலவழி,
பந்தல்களில் தாகம் களைதீர்க்கச் செயுமுதவி,
அன்னதான மடங்களிலே அவி,
அடியார் தோள்களிலே
சாமிகாவப் போட்டி,
சுவாமிகள் முன் கற்பூரத்
தீபச் சுடர்ச்சட்டி, தீவெட்டி,
கூவுகிற
‘சேவல் மொழி’, நிதமும் வெவ்வேறு நம்பண்டைச்
சமய விழுமியங்கள் சங்கமிக்க வரும் பவனி,
எமது மரபுக் கருவி வகைகளுடன்
திருச்சின்னம், சங்கு, எக்காளம், நெடுந்தாரை,
வரிசையாய் வளைகுழல், சேர்…
கொம்புவாத் தியங்களின் ஒலி,
பாரம் பரிய உடை,
பக்திக்கே முன்னுரிமை,
சேவகராய் சிவப்புச் சால்வைகட்டித் தொண்டர்கள்,
சாத்துப் படிநிறத்தில் குருக்கள்மார் வாத்திய
காரருக்கும் வேட்டி,
‘கட்டியக்’ கம்பீரம்,
ஒருமுகத் திருவிழாவில்
அட்டதிக் கறிந்த ‘வரவேற்புத் துதி’, என்று…
களியாட்டம் அற்று கலக்கும் ‘நல்லை
அலங்காரன்’
திருவிழா!
‘கோவிற் சட்டம்’ சிறிதும் மாறா
நெறிமுறையை… நேரம் தவறா
நியமத்தை…
அயலெங்கும் இசையும் பாட்டும்
உயிர்ப்பிக்கும்
பகலிரவை…பக்தி உணர்வு பூர்வமாய்ப் பெருகும்
தெய்வீகச் சூழலை… இவை எம் தனித்துவத்தின்
வைபோகம் என்று வரையறுத்து;
“இப்படித்தான்
திருவிழா செய்யவேணும்” என்றுரைத்து;
திசைவியக்க
வரலா றமைத்துச்; செய் நேர்த்தியால் புவியைஈர்த்து;
சகலருக்கும் உதாரணமாய்…
யார்க்கும் முன்னோடியுமாய்…
வழிவழியாய்க் காத்த மரபு பிசகாமல்,
அழகு ஒழுங்கு யார்தான்
மாறினாலும் மாறாமல்,
பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்…
ஓர் மாதம்
உலகத் தமிழ்ச் சைவ உயிர்விழாவாய்…
திருநல்லூர்
ஆலயப் பெருவிழா அமைகிறது!
இன்றைக்கும்
“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…
‘வேலன் விழா’ நம் விழுமியம், கலாசாரம்,
யாழின் தனித்துவத்தைக் காத்துச்
சிறக்கிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.