தேரிலேறி தீமை தீய்ப்பான்

‘ஆறுமுகர்’ தேரிலேறி ஆடி வந்திடும் – காலை
அதிசயங்கள், அற்புதங்கள் கோடி பொங்கிடும்.
வீறுகொண் டாக்ரோஷமோடு சஞ்சரித்திடும் – வேலன்
விழிப்பிளம்பு தீமைகளை சங்கரித்திடும்.

இலட்ச இலட்சமாக பக்தர் வந்து கூடுவார். – கந்தன்
“எங்கள் குறை தீர்க்க வேணும்” என்று தேடுவார்.
நிலை மறந்து நெஞ்சுருகி நேர்ந்து வீழுவார் – வேலின்
நிழலில்…உடல் உயிர் வலிகள் யாவும் நீக்குவார்.

நாதசுரம், மேளம், கொம்பு வாத்தியம், மணி -ஆர்க்க
நா, மனங்கள் சொல்லிடும் “அரோகரா” தனி.
வேதம், தேவாரம், பஜனை, மந்திர, அணி- பொய்யை
வீழ்த்தும்; கற்பூர தீபம், தூபம் சுடும் பிணி!

காவடி, தீச்சட்டி, பிரதட்டை சூழுமாம்.- தூக்குக்
காவடிகள், அடி அளிப்பு, நேர்த்தி நீளுமாம்.
சேவடியில் வீழ்ந்தழுவோர் உள்ளம் தாழுமாம் – அவை
தேறி… நிம்மதியும் சுகமும் பெற்று வாழுமாம்.

தீமையை ‘அழிக்கும்’ தொழில் தனை உணர்த்திடும் – கோவிற்
தேரைக் காணத் தோன்றும்… ‘அசதி’ நமைப் புடம் இடும்.
மாயன் ‘பச்சை சாத்தி’ ஆறி மீள மிகும் நலம். – ‘நல்லை
மன்னவன்’ தேர் வைய மாந்தருக்குத் தரும் வரம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.