வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும்
பூஞ் சப்பறத்தில்
ஆரோகணித்து வந்தாள் அன்னை;
புடைசூழ்ந்து
அடியார்கள் கூட்டம் அலைமோத…
நாதவெள்ளம்
மடைதிறந்து பாய…
வளரிரவைப் பகலாக்கி
மின்னிலே பூத்த வெவ்வேறு பூக்கோலம்
மின்ன…
‘சிட்டிவேரம் கண்ணகித்தாய்’
வீதி உலா
வந்தாள்;
அவள் விழியில் வழிந்தது கருணையூற்று!
சிந்தினாள் புன்னகையை;
சேயெனதும் நெஞ்சத்துச்
சஞ்சலந் துடைத்துத்… தந்தாள் அருட்கடாட்சம்!
பஞ்சாய்ப் பறந்தது பயம், கவலை!
சுற்றிவந்த
களையாறக், காலாற, கண்ணகித்தீ
பரிவார
இளையரொடு ‘வடக்கு வீதியிலே’ சற்றமர்ந்தாள்!
வந்த களைபோக்க
வல்ல பெருங்கலைஞர்,
விந்தைமிகு நாத சுரத் தவில் விற்பன்னர்,
மந்திர இசையாலே
வருடிக் கொடுத்தார்கள்!
நாதக் குழல் மழையும்,
நர்த்திக்கும் விரல்களாலே…
மேளங் களிலிருந்து
முழங்கிய லய இடியும்
பொங்கிப் பிரவகித்துப்
புத்துயிர்பை ஊட்டிற்று!
எங்கள் மனப்பாரம் இறக்கி,
ஒரு அமைதி
நிம்மதியைத் தந்ததந் நிமிடங்கள்;
இசை இரசித்து,
எம்மையும் அருகழைத்து,
குறைகேட்டு, வரம் தந்து,
வாழ்த்தி அனுப்பிவைத்தாள் மாதேவி!
அவளடியில்
வீழ்ந்தெழுந்து மீண்டோம்;
வேறென்ன வேண்டுமினி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.