தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர்
துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே-
அவை
மாயும் அகலும் வழிவிடும் – என
மா அறிஞர் முன்புரைத்தனர்- அது
நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி
நோன்புகள் நேர்த்திகள் செய்துமே – நின்றால்
காலமும் நேரம் இயற்கையும் – அட
கால நிலைகளும் மாறுமாம்.

ஏதும் உள் நோக்கங்கள் அற்றுமே – மிகு
இலாபங்கள் தேடுதல், வஞ்சகம் -செய்து
தீதைப் பரப்பல், ‘முயல்வோரின் – செயல்’
தேய்ந்திடத் திட்டங்கள் தீட்டுதல்- என
பேதமை செய்து திரிந்திடார் – உண்மைப்
பீடு ஜெயிக்க உழைப்பவர் – தெய்வ
நீதிக்கு அஞ்சி நடப்பவர் – செய்யும்
நேர்த்தி பலிக்கும் ஜெயிக்குமாம்!

உண்மை இது; கதை அல்லகாண்-நேற்றெம்
ஊரில் நடந்தது; தீமையை – தூண்ட
எண்ணி இருந்தோர் ஏமாந்தனர்- நேர்மை-
யின்வழி சென்றோரே வென்றனர்- பழித்
துண்மை மறுத்தோர் குனிந்தனர்- சொன்ன
தூற்றலை ஊரார் மறுத்தனர்- நல்ல
எண்ணங்கள் எத்தடை நேரினும் – நன்றாய்
ஈடேறும் யாவரும் பார்த்தனர்!

பொறாமை எரிச்சல்கள் போட்டியால் -மனப்
புகைச்சலோ டாற்றாமை கொண்டுதான்- “தம்
திறமையால் செய்ய முடியலை – வேறு
செய்ய வழிவகையும் இல்லை”- என்ற
வறுமையில் வாடுவோர் தூற்றலாம் -அந்த
வசைகளால் ஏதும் நடந்திடா(து) – இந்தச்
சிறுமதி கொண்டோரின் திட்டுக்கள்- ஏதும்
செய்யா திது மெய் யதார்த்தமாம்!

மண்ணில் மலர்ந்த பெருமையை- மக்கள்
வாழ்க்கையை, மண்ணின் மணத்தினை- வந்த
தொன்மை மரபை, தனித்துவப் – பழஞ்
சொத்தை,விழுமியம் என்பதை – காக்க
எண்ணி இருப்போர், கலைகளில் – நிதம்
ஈடுபட்டுள்ளம் இளகியோர் – கலை
விண்ணர் ஜெயிப்பர்; இறைவரும் – அவர்
வேண்டுத லுக்கு உதவுவார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.