பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப்
பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்?
பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர்
புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும்.
பொய்யிதே என்று புரிந்தும் – அதைப்
புன்னகையோடே கடத்தல் சிறப்பும்!
பொய்களைச் சொல்வோரின் திட்டம் – இந்தப்
பூமிக்குப் புரியாதா? அவர் வாய்க்கே நஷ்டம்!

பொய்யைப் புரட்டைச் சோடித்து – சூழும்
புகழைக் கெடுத்திடவே திட்டமிட்டு
ஐயோ வக்கிரம் பொறாமை கொண்டு- காழ்ப்பு
அக எரிச்சலை வசை, கீழ்ச்சொல்லில், தந்து
“வையகம் நம்புமாம் கண்டு – அதால்
மக்கள் சாமானியர் குழம்புவார்” என்று
செய்திடும் சேட்டைகள் நின்று – பொய்போல்
தேய்ந்திடும்; உண்மை நிலைக்குமாம் வென்று!

அவதூறு பேசின்; பின்வாங்கி -யாரும்
அடங்குவார் எனப் ‘பொது வெளியிலே’ ஏங்கி
எவரையும் தூற்றியே துள்ளி… -நிற்போர்
இயல்பு, தரம், தேர்வார் எல்லோரும் எள்ளி!
எவையும் நேரே செய்ய அஞ்சி, -மோதி
எதிர் நிற்கத் துணிவின்றி, முகம் காட்டாப் ‘போலி
அவதூறு’ எழும் நொடியில் வாடி – ‘செய்யும்
அகத்’ துர்க்குணம், சிறுமை, அறியும் ஊர் தேடி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.