மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள்.
போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள்.
பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய
பலரையும் தேடித் தின்றது ஏவு கணை.
பாடு பட்டவர், பகலிர வாகத் தம்
பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி,
வாழும்… மாநகர்களைத் தூள் தூளென
வதைத்த ழித்தன ‘ட்ரோன்கள்’, விமானங்கள்!

மானுடத்தின் அறிவியற் சாதனை,
மண்ணைச் சொர்க்கமாய் மாற்றிய கைப்பலம்,
யாவையும்… ஏதோ அற்ப காரணத்திற்காய்
மனித விழுமியம், இயற்கை அறம், சட்டம்,
ஈவிரக்கம், எதையும் பாராமலே…
“எவர்கள் கேட்பார்கள்” எனும் இறுமாப்பிலே…
ஏவி நவீன ‘ ஆயுதப் பேய்களால்’
எல்லோரும் ஊழிக் கூத்துகள் ஆடுறார்!

ஆயிரம் மைல் தொலைவினைத் தாண்டியே
அனாயசமாக அடுத்தடுத்து வந்து
மாய்க்கும் நித்தம் கணைகள் வரிசையாய்!
வட்டமிட்டும் சுழன்றும் ‘ ‘மிகையொலித்
தாரை’ விமானங்கள், விமானந் தாங்கிகள், கணம்
ஏவும் கணைகள் எண்திக்கும் சென்றிடும்.
எரித்துத் திக்குத் திசைகளைக் கொன்றிடும்.

சும்மா விளையாட்டாய்த் தொடங்கி, “மிரட்டினால்
சோர்ந்து போகும்” என நினைத்த சமர்
தம் பலங்களைக் காட்டிட.. எல்லைகள்
தாண்டி எங்கெங்கோ… தீயினை மூட்டுது.
வெம்மை கூடிப் பகைமை வலுக்குது.
விரைவில் நில்லாது நீண்டு…உலகையே
வம்பாய் அழித்துத் துடைக்கவா போகுது?
மனங்களில் ஐயம் அச்சமே மிஞ்சுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.