கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே,
சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே,
வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே,
வேர்வை நதிகள் விரைந்து
மேனி மேடுபள்ளத்
தூடு பெருக்கெடுத்து
உடலைக் கழுவையிலே,
ஒற்றி எடுக்க… ஒத்தடங்கள் தான் பிடிக்க…
முற்றத்தில் தேடிவந்து முத்தமிட…
இளம்காற்று
வாராக் கொடுமையிலே,
மனம் உடலும் தகித்தபடி
சீராட்ட ஆட்களில்லாத் தீய்ந்த தனிமையிலே,
வாடிக் கிடக்கின்றேன்.
வரண்டு வெடிக்கின்றேன்.
கூடவில்லை மகிழ்வு குத்தி முறிகின்றேன்.
இப்படியோர் சூழலிலே…
எதையும் வறுத்தெடுத்துச்
சப்புகிற கோடையிலே…
தளிரும் செடிகொடியும்
சோர்ந்து துவழ்கையிலே…
ஓரிரு துளி உதிர்த்துத்
தூவாதோ ஏதும் முகில்கள்?
துடித்தவையும்
வாடி வரண்டனவோ?
வானில் மழை துளிர்க்க
ஏதும் சமிக்ஞைகள் இல்லையோ?
வாடுமிந்த
ஈரமிலாக் கோடையை இதமாக்கக்
குளிர் குழைத்து
யாரேனும் பானங்கள் தாராரோ?
குளிரூட்டி
போல் எவரும் போக்காரோ புளுக்கத்தை?
சிலிர்ப்பூட்டி
யாரேனும் பாடாரோ?
எவரேனும் பனிப்பொழிவாய்
ஏதும் ஒருசிந்து, எழிற்கவியை,
மெல்லிசையை
வீசாரோ எம்மேல்?
வீணை, வயலினினால்
தூவாரோ பன்னீர்?
துரத்துமிக் கோடைவாழ்வில்
ஏதும் இதம்அருள
இறைவர் விரும்பாரோ?
சூழலின் கோடை, தொடர்ந்தடிக்கும் போர்க்கோடை,
வாழ்க்கையின் கோடைக்கும்,
தீர்வினையார் தருவாரோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.