தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால்
‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர்,
ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின்
உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர்,
ஓங்கி உயர்கிறார்; உண்மையாய் நேர்மையாய்
ஊழல் செய்யாதவரோ…நலிவார்!
சட்டம் எதையும் ‘தனத்தை’ எறிந்துமே
தன்கட்டுப் பாட்டினில் கொண்டுவந்து,
தகுதி யிலாத பொழுதும்… உயர்ந்தோரைச்
சார்ந்து அவர் கை, கால், வால்பிடித்து,
திட்டப்படி தன் பதவி திரு புகழ்
சேர்த்து “அசைக்க ஏலாது” என்று,
தீமை பழிகட்கு அஞ்சாது, சம்பவம்
செய்வோரே ஆள்கிறார் இன்று வென்று!
இந்தக் கலியினில் எல்லாம் தலைகீழாய்
இங்கு நடப்பது தான் வழமை.
ஏய்த்துத் திருடி, ஊர் தன்னைத் தட்டிச் சுற்றி
இடறி விழுத்தியே தன் கடமை-
முந்தி ஜெயித்திட வைத்து; புகழ், திரு
முன்னிலை காண்பதற்கே தலைமை
முக்கியே கொள்வார்; முயன்று உழைப்பவர்
முப்பொழுதும் வீழுவதே நிலமை!
“இப்படியே விதி நீண்டு நிலவுமோ”
என்று அடிக்கடி கேள்வி எழும்.
இன்று வரை பல இப்படி நேர்ந்தது
‘என்ன நடந்தது ஈற்றில்’…சொ(ல்)லும்?
சப்பியே துப்பும் சரிதம்…அதர்மத்தை;
தர்மமும் உண்மையும் தான் ஜெயிக்கும்!
சான்று பல இருந்தாலும்…’மனமந்தி’
சந்தேகத்தோடே நிதமலையும்.





