மூண்டுஎழும் மோதல்களில்
மூச்சிழந்து யாரெவர்…மண்
மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம்
முக்கி உசிரூசலாட வீழ்ந்தார்?
மக்கள் செறிவாகவுள்ள
மாநகர்க் குடிமனைமேல்
வந்து விழும் ஏவுகணை நூறு- எவர்
மாய்ந்தழிந்தார் கூறுவது யாரு?
இலட்ச இலட்ச மாக மக்கள்
இருக்குமிடம் மீது பல
இலட்சம் குண்டு வீசுவதா தர்மம்? – அழி-
விறப்பில் எவர் காண்கிறார்கள் கர்வம்?
ஈவிரக்க அற்று… கணை
ஏவித், திசையை நொருக்கி,
இரத்த ஆறு ஓடவைக்கும் போரை- செய்து
என்ன கண்டார்? சாய்ப்பது ஏன் வேரை?
யாவரென்ன ஆனாலென்ன?
யாம் எடுத்து வைத்த காலை
யாம் திரும்ப வைக்கமாட்டோம் என்று – யுத்த
யாகம் செய்வார்; மானுடத்தைக் கொன்று.
ஆணவம், மமதையதும்,
ஆக்கிரமிப்புச் சிந்தனையும்,
ஆசை இலாபமும், வளம் பறிக்கும் -எண்ணம்
அதுவும், ஆள…யாரை தின்னும் இன்னும்?
மாறி மாறி ஏவுகிற
மாய ஏவு குண்டுகளால்
மானிடரும் மானிடமும் மாழும் – யார்தான்
வாகை சூடி…ஈற்றில் என்ன ஆகும்?
பாட்டாளியும் கூட்டாளியும்
பாடுபட்டுச் சேர்த்த பொருள்
வேட்டால்…சுடு காட்டுச் சாம்பல் ஆக – என்ன
வெற்றி கண்டார்… யாவருமே சாக?





