இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஆகாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்க ஏலாது.
இயற்கையைச் சீண்டினால்…
இயற்கை எமைத் தோண்டி
உயிரோடே புதைத்துவிடும் என்பதுதான் நிஜம், யதார்த்தம்.
இயற்கையின் மாற்றத்தை
எம் அறிவு, கருவிகளால்
உய்த்தறிய முடியும்.
ஒரு ‘வானிலை’ அறிக்கைச்
செய்தியாக்க இயலும்.
‘காலநிலைக் குழப்பம்’
எப்ப எவ்வாறு எங்குவரும் என்பதனை
ஒப்பீட் டளவில் ஓரளவு சரியாகச்
சொல்லவும் முடியும்.
தொட்டவற்றைக் கலைத்திடவோ…
“எல்லைக்குள் வராதீர்” என்று
துரத்திடவோ…
இயற்கை செயும் அழிவை
எதிர்த்துத் தடுத்திடவோ…
இயற்கையை நாம் நினைத்தபடி
இருத்தி எழுப்பிடவோ…
இயற்கையதன் சீற்றத்தை
எப்படியும் தணித்திடவோ…
இயற்கையதன் கோபத்தை
எமக்கேற்ப ஆற்றிடவோ…
எந்தப் பலம், அறிவு இருந்தாலும்
முடியாது!
எந்த அறிவியலும் இயற்கையை
வழிநடத்தல்
இயலாது!
இந்த எதார்த்தம் மிகப் புரிந்து, ‘எம்
இயலுமையின்’ ஆழ நீள அகலத்தை
ஏற்றுணர்ந்து,
இயற்கையுடன் இயைந்து,
இயற்கையுடன் இணைந்து,
இயற்கைக்குப் பயந்து,
இயற்கையின் முன் பணிந்து,
இயற்கையினை மீறாது,
இயற்கை வழி மாறாது,
அது கோபம் கொள்ளா திருக்கவைத்து,
கோபமுற்றால்…
அதிலிருந்து யாம் தப்ப என்னவழி
என ஆய்ந்து,
அது மகிழ்ந்து பொங்கையிலே
அதனால் பலன்பெற்று,
அதனை மதித்து,
அதன் இயல்பைப் புரிந்து,
அதனை அனுசரித்து,
அதனை அரவணைத்து,
அதைப்பகையாய் ஆக்காமல்
அதை நட்பாய் ஆக்கிவைத்து,
அது குளிர எங்களினால்
ஆனதனைச் செய்து,
அதற்கு எதும் படைத்து,
அது ஆனந்திக்க வைத்து,
அதனோடொத் தோடுவதே
அனைவருக்கும் நன்மையென்பேன்!
நம்முன்னோர் அதைத் தெளிந்து,
நடந்து,
அதனோடிணைந்து,
தம்மைத்தாம் காத்தார்கள் என்பதை
நான் அறிகின்றேன்.
இயற்கையை நாம் விட்டகல…,
இயற்கையுடன் முட்டி மோத…,
இயற்கையெமைக் கைவிட்டு
எதிர்க்குமெமை உணர்கின்றேன்!
“இயற்கையும் – காலமும், இறை, விதியும், வேறல்ல”
உயர்ந்தோர்கள் சொன்னார்கள்!
இயற்கையைப்போல் ‘காலம், இறை,
விதியுடனும் புழங்குவதே
விபரீதமில்லாது வாழும்
மதிநுட்பம்;
புரிந்தோர்க்கு வாழ்நாளில்
இல்லையச்சம்!





