இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து,
அவலம் கையாளப் பல்
ஆயிரம் வழிகண்டு,
அதற்கு ஆள் அணி அம்பு
தேடி அனைவரையும் திரட்டி
ஒருங்கிணைத்து,
எப்படி மழைவரும்?
எத்திசையாற் காற்றுவீசும்?
எப்போ வெயிலடிக்கும்?
எத்தனைநாள் துயர் நீளும்?
எப்படிப் புயலலைக்கும்?
எங்கெங்கு வெள்ளமேறும்
எப்படி? எனமுன்பே எதிர்வுகூறியும் நின்று,
எப்படி வெள்ளத்தில் இருந்து மக்களைக்காத்தல்?
எப்படி உறவினர் நண்பர் வீட்டில் இருக்கவிடல்?
எப்படிச் சனத்தை இடம்பெயர்த்துத் தங்கவைத்தல்?
எப்படி நலன்புரி முகாமொன்றைப் பராமரித்தல்?
எப்படி உலருணவு வழங்கல்?
சமைத்துணவு
எப்படி எப்போ எவ் அளவில் கொடுத்துதவல்?
எப்படிப் பாதிப்புச் செய்திகளைப் பரிமாறல்?
எப்படித் தரவேற்றல்?
எப்படி அறிக்கையிடல்?
எப்படி வெள்ளம் வடியும் வழிசெய்தல்?
எப்படி மின்வழங்கல்?
எப்படித் தொடர்பாடல்?
எப்படி வீதிகளில் வீழ்ந்த மரமகற்றல்?
எப்படிப் பயணத் தடைகளினைச் சீர்ப்படுத்தல்?
எப்படிப் பொருத்தமான இயந்திரங்களைத் திரட்டல்?
எப்படி அனைவருக்கும் முன்னெச்சரிக்கை விடல்?
எப்படி சேவைகளை வழமைக்குத்
திரும்பவைத்தல்?
எப்படிப் ‘பேரிடரிருந்து’ முழுதாக மீண்டுவரல்?
என்று…பலகதைத்து;
“எதற்கும் தயார் நாங்கள்”
என்று அறிக்கைவிட்டுக் காத்திருந்து;
பெருமனர்த்தம்
சுழல்காற்றாய், மழையாய், சூறா வளி, புயலாய்,
நிலச்சரிவாய், வெள்ளப் பெருக்காய்,
உறையவைக்கும்
குளிராய்,
பகலிரவு கொட்டம் அடித்தபோது
“நாம் நினைத்த தேதோ
நடந்தது வேறேதோ”வென்-
றானதையோ!
இன்று அனர்த்தத்தின் தாண்டவத்தின்
ஆரம்பத் திலேயே மின் அறுந்து
தொலைந்துபோச்சு.
கையடக்கத் தொலைபேசிக் ‘கவரேஜ்’
மறைந்துபோச்சு.
என்னென்ன வழிகளில் தகவல் திரட்ட எண்ணி
நின்றிருந்தோம்?
அத்தனையும் நிமிடத்துள் ஊமையாச்சு.
Watsup, viber, email, voice massege யாவும்
முற்றாய்ச் செயலிழந்து முடிந்தது.
தொலைத்தொடர்புத்
தந்தி, Fax இணைப்பு, சாத்தியமற் றதாச்சு.
பாதை வழித்தடத்தில் பயணம் தடையாச்சு.
வானப் பறப்பு மட்டுப் படக், கடல்
ஓரம் தலைவைத்தல் முடியாக் கதையாச்சு.
போட்ட சல்லி, மண்ணை வெள்ளம் புசித்தரிக்கத்
தூங்கிற்றுத் தண்டவாளம்.
தொடருந்து நின்றுபோச்சு.
இடம்பெயர்ந்த சீவன்களை
ஏற்றி இறக்குதற்குத்
தடையாக வீதிகள் தண்ணீரில் மூழ்கிற்று.
கடையெல்லாம் பூட்டு.
கடமைசெய்ய வந்தவர்க்குக்
கிடைக்கவில்லை சோறு.
தொலைந்த உயிர் நூறுநூறு.
மீட்பு நடவடிக்கை முடியவில்லை வென்று.
கேட்டவரம் சில கிடைக்க
கிடைக்கவில்லை வரத்தின்
நன்மைப் பயன்திரண்டு.
“நன்றாகத் திட்டமிட்டு
என்னமுன் ஆயத்தம் எதுசெய்தும்
எனைத்தடுத்தல்,
என்னை அடக்கல், எனைவெல்லல்,
மிகக் கடினம்”
என்றும்;
“என்முன் நும் ஆற்றல், கருவி, பொறி,
முன்னாயத்த திட்டமிடல் முயற்சியெல்லாம்
தூசு” என்றும்;
சொல்லி ‘இயற்கை’தன் சூரத்தன வலிமை
சொல்லிடுது அடிக்கடி!
தன்னைச் சொறிந்தால்…
“எல்லாம் பிழைக்கும்”என எழுதிடுது விதி”! நிதம் தன்
வல்லமையைக் காட்டி…
உலகத் திசையெங்கும்
சொல்லிடுது பலசேதி!
“என்னநாம் கற்ற பாடம்?”
என்றறியோம்;
புதுப்புது அனர்த்த இடர் சாய்க்க
சின்னாபின்ன மாகித்
திகைத்தழிந்து கொண்டுள்ளோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.